உலக கோப்பை கால்பந்து போட்டி: உருகுவே அணியில் சுவாரஸ், எடிசன் கவானி


உலக கோப்பை கால்பந்து போட்டி: உருகுவே அணியில் சுவாரஸ், எடிசன் கவானி
x

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான உருகுவே அணியில் சுவாரஸ், எடிசன் கவானி இடம் பெற்றுள்ளனர்.

மான்ட்வீடியோ,

22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் வருகிற 20-ந் தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

உலக கோப்பை போட்டிக்கான உருகுவே அணியை தலைமை பயிற்சியாளர் டியோ அலோன்சா அறிவித்துள்ளார். டிகோ காடின் தலைமையிலான 26 பேர் கொண்ட அணியில் மூத்த வீரர்கள் லூயிஸ் சுவாரஸ், எடிசன் கவானி, காயத்தில் இருந்து மீண்டு வரும் ரொனால்டு அராஜோ, ஜோஸ் லூயிஸ் ரோட்ரிக்ஸ், மேக்ஸ் கோமெஸ், டார்வின் நுனெஸ் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.

2 முறை சாம்பியான (1930, 1950-ம் ஆண்டு) உருகுவே அணி 14-வது முறையாக உலக கோப்பையில் பங்கேற்கிறது. உருகுவே அணி 'எச்' பிரிவில் இடம் பிடித்துள்ளது. போர்ச்சுகல், கானா, தென்கொரியா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். உருகுவே அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 24-ந் தேதி தென்கொரியாவை சந்திக்கிறது.


Next Story