கால்பந்து ஜாம்பவான் பீலே கொரோனா தொற்றால் பாதிப்பு


கால்பந்து ஜாம்பவான் பீலே கொரோனா தொற்றால் பாதிப்பு
x

கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக்குறைவால் சாவ் பாலோ நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார்.

சாவ் பாலோ,

தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 81). கடந்த ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிறிய கட்டி அகற்றப்பட்டது. இதன்பின்னர், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கால்பந்து விளையாட்டின் ஜாம்பவானாக கருதப்படும் பிரேசிலின் பீலே உடல்நலக்குறைவால் சாவ் பாலோ நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். 82 வயதான பீலே, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஏற்கனவே பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புக்காக ஹீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பீலே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் மூச்சு விடுவதில் சிரமப்படும் அவருக்கு அது தொடர்பான சிகிச்சை அளிக்கப்படுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பீலேவின் மகள்கள் கெலி, பிளாவியா, பேரன் ஆர்தர் அரான்டெஸ் ஆகியோர் கூறும் போது, 'கொரோனாவின் தாக்கத்தால் பீலேவுக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் நன்றாக இருப்பதாக உணரும் போது, வீடு திரும்புவார். அவர் வாழ்க்கையின் இறுதிகட்ட சிகிச்சையில் இருப்பதாக கூறப்படுவதில் துளியும் உண்மை இல்லை. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை. வழக்கமான அறையில் தான் இருக்கிறார். ஆபத்தான கட்டத்தில் இல்லை. நாங்கள் சொல்வதை நம்புங்கள்' என்று கூறியுள்ளனர்.

1958, 1962, 1970-ம் ஆண்டுகளில் பிரேசில் அணி உலகக் கோப்பையை வென்றதில் பீலே முக்கிய பங்காற்றியது நினைவு கூரத்தக்கது.


Next Story