எப்.ஏ. கோப்பை: மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி சாம்பியன்.....!
மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது
இங்கிலாந்தில் உள்ள கிளப் அணிகளுக்கு இடையில் நடத்தப்படும் எப்.ஏ. கோப்பைக்கான கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு விம்ப்ளே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மான்செஸ்டர் சிட்டி- மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் முதல் பாதியிலேயே மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் நிமிடத்திலேயே மான்செஸ்டர் சிட்டி வீரர் லிகாய் குன்டோகான் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் மான்செஸ்ட்ர் சிட்டி 1-0 என முன்னிலைப் பெற்றது.
பின்னர் 31-வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி புருனோ பெர்னாண்டஸ் கோல் அடித்தார். இதன் காரணமாக முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல்களுடன் சமநிலையில் இருந்தன. 2-வது பாதி நேரம் ஆட்டம் தொடங்கியதும் மான்செஸ்டர் சிட்டி கைதான் ஓங்கியிருந்தது. 51-வது நிமிடத்தில் மீண்டும் குன்டோகான் கோல் அடிக்க மான்செஸ்டர் சிட்டி 2-1 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் மான்செஸ்டர் யுனைடெட் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.
இறுதியில் மான்செஸ்டர் சிட்டி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் 7-வது முறையாக மான்செஸ்டர் சிட்டி எப்.ஏ. கோப்பையை வென்றுள்ளது.