ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: ருமேனியா, பிரான்ஸ் அணிகள் வெற்றி
17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.
முனிச்,
17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 'நாக்-அவுட' சுற்றுக்கு தகுதி பெறும். இந்நிலையில் இந்த தொடரில் நேற்று மாலை 6.30 மணிக்கு முனிச்சில் நடைபெற்ற ஆட்டத்தில் ருமேனியா - உக்ரைன் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற ருமேனியா ஆட்டத்தின் 2வது பாதியில் அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அசத்தியது. இறுதியில் இந்த ஆட்டத்தில் ருமேனியா அணி 3-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனை வீழ்த்தியது.
இதையடுத்து இரவு 9.30 மணிக்கு பிராங்பர்ட்டில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் - ஸ்லோவாக்கியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தை 1-0 என்ற கணக்கில் ஸ்லோவாக்கியா கைப்பற்றி பெல்ஜியத்திற்கு அதிர்ச்சி அளித்தது.
இதையடுத்து நள்ளிரவு 12.30 மணிக்கு டுசெல்டார்பில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் - ஆஸ்திரியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.