ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: கோல் மழை பொழிந்த ஜெர்மனி...ஸ்காட்லாந்தை வீழ்த்தியது


ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: கோல் மழை பொழிந்த ஜெர்மனி...ஸ்காட்லாந்தை வீழ்த்தியது
x

Image Courtesy: AFP

ஆட்ட நேர முடிவில் ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது.

முனிச்,

சர்வதேச கால்பந்தில் உலகக் கோப்பைக்கு அடுத்து மிகப்பெரிய போட்டியான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் (யூரோ) 1960-ல் இருந்து 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த அணிகள் ஒருசேர அணிவகுக்கும் இந்த கால்பந்து போட்டியில் அதிகபட்சமாக ஜெர்மனி, ஸ்பெயின் தலா 3 முறை மகுடம் சூடியுள்ளன.

கடைசியாக கொரோனாவால் ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டு 2021-ம் ஆண்டில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் இத்தாலி அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் இங்கிலாந்தை சாய்த்து கோப்பையை வென்று இருந்தது. இந்த நிலையில் 17-வது ஐரோப்பிய கால்பந்து போட்டி ஜெர்மனியில் நேற்று தொடங்குகிறது. இதில் 24 அணிகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 அணிகள் மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும். ஜெர்மனியில் மொத்தம் 10 இடங்களில் போட்டி நடக்கிறது. இறுதிப்போட்டி ஜூலை 14-ந் தேதி பெர்லினில் அரங்கேறுகிறது.

முதல் நாளான நேற்று உலக தரவரிசையில் 16-வது இடம் வகிக்கும் ஜெர்மனி, 39-ம் நிலை அணியான ஸ்காட்லாந்தை (ஏ பிரிவு) முனிச் நகரில் சந்தித்தது. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெர்மனி கோல் மழை பொழிந்தது.

ஜெர்மனி அணி முதல் பாதி ஆட்டத்தில் 3 கோல்களும், 2வது பாதி ஆட்டத்தில் 2 கோல்களும் அடித்து அசத்தியது. பதிலுக்கு ஸ்காட்லாந்து அணி 87வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது. இறுதியில் ஆட்ட நேர முடிவில் ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது.


Next Story