கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பெனால்டி ஷூட் அவுட்டில் கனடாவை வீழ்த்தி 3வது இடம் பிடித்த உருகுவே
48-வது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
வட கரோலினா,
48-வது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த தொடரின் லீக்,காலிறுதி ஆட்டங்களின் முடிவில் அர்ஜென்டினா, கனடா, உருகுவே, கொலம்பியா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
இதில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் கனடா அணியை வீழ்த்தி அர்ஜென்டினாவும், 2வது அரையிறுதி ஆட்டத்தில் உருகுவே அணியை வீழ்த்தி கொலம்பியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. அர்ஜென்டினா - கொலம்பியா அணிகள் இடையிலான இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்நிலையில் 3வது இடத்திற்கான போட்டியில் அரையிறுதி ஆட்டங்களில் தோல்வி கண்ட உருகுவே - கனடா அணிகள் இன்று மோதின. இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமனில் இருந்தது.
தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் கனடா அணி மேலும் ஒரு கோல் அடித்து 2-1 என முன்னிலை பெற்றது. இதையடுத்து இந்த ஆட்டத்தில் கனடா அணி வெற்றி பெறும் என எதிர்பார்த்த வேளையில் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் உருகுவே அணி கோல் அடித்து அசத்தியது. இதனால் ஆட்ட நேர முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது.
இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இந்த பெனால்டி ஷூட் அவுட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் கனடா அணியை வீழ்த்தி உருகுவே அணி 3வது இடத்தை கைப்பற்றியது.