கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: அர்ஜெண்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: அர்ஜெண்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x

Image Courtesy: AFP 

கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

நியூ ஜெர்ஸி,

48-வது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த தொடரின் லீக், நாக் அவுட் (ரவுண்ட் ஆப் 16), காலிறுதி ஆட்டங்களின் முடிவில் அர்ஜெண்டினா, கனடா, உருகுவே, கொலம்பியா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

இதில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அர்ஜெண்டினா - கனடா அணிகள் மோதின. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜெண்டினாவின் ஜூலியன் ஆல்வரெஸ் (22வது நிமிடம்) கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலை பெறச்செய்தார்.

முதல் பாதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி 1-0 என முன்னிலை பெற்றது. இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரரான மெஸ்ஸி (51வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் அர்ஜெண்டினா அணி 2-0 என முன்னிலை பெற்றது.

இதையடுத்து இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா அணி உருகுவே அல்லது கொலம்பியா அணிகளில் ஒன்றை எதிர்கொள்ளும்.


Next Story