தூரந்த் கோப்பை கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி வீரரை இனவெறியுடன் திட்டியதாக புகார்
தூரந்த் கோப்பை கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி வீரரை இனவெறியுடன் திட்டியதாக பெங்களூரு அணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
20 அணிகள் பங்கேற்றுள்ள தூரந்த் கோப்பை கால்பந்து போட்டி கொல்கத்தா, இம்பால், கவுகாத்தி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடந்த 'ஏ' பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் பெங்களூரு எப்.சி. 4-0 என்ற கோல் கணக்கில் இந்திய விமான படையை வீழ்த்தி தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியின் போது இந்திய விமானப்படை அணி வீரர் ஒருவர் இனவெறியுடன் திட்டியதாக சர்ச்சை கிளம்பி இருக்கிறது.
இது குறித்து பெங்களூரு அணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'தூரந்த் கோப்பை போட்டியின் போது எதிரணியை சேர்ந்த வீரர் ஒருவர் எங்கள் அணியின் வீரரை நோக்கி இனவெறியுடன் திட்டினார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாங்கள் புகார் செய்து இருக்கிறோம். இனப்பாகுபாட்டுக்கு எந்தவொரு இடத்திலும் இடமில்லை. கால்பந்து எல்லோருக்கும் பொதுவானது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.