ஆசிய கோப்பை தகுதி சுற்று கால்பந்து போட்டி; கம்போடியாவை 2-0 என வீழ்த்தியது இந்தியா


ஆசிய கோப்பை தகுதி சுற்று கால்பந்து போட்டி; கம்போடியாவை 2-0 என வீழ்த்தியது இந்தியா
x

ஆசிய கோப்பை தகுதி சுற்று கால்பந்து போட்டியில் கம்போடியாவை 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.



கொல்கத்தா,



ஆசிய கோப்பை தகுதி சுற்று கால்பந்து போட்டிகள் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் பிதன்நகர் பகுதியில் அமைந்த விவேகானந்தா யுவ பாரதி க்ரிரங்கன் ஸ்டேடியத்தில் நடந்து வருகின்றன.

இதில், குரூப் டி பிரிவில் இந்தியா மற்றும் கம்போடியா அணிகள் மோதின. போட்டி தொடங்குவதற்கு முன், கம்போடியா நாட்டு பெயரை அறிவித்து விட்டு அந்நாட்டின் தேசிய கீதம் 5 நிமிடங்கள் வரை இசைக்காமல் விடப்பட்டது பொது அரங்கில் அவர்களுக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்படுத்தியது.

இதற்காக பின்னர் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, கம்போடிய கேப்டனிடம் சென்று மன்னிப்பு கேட்டு கொண்டார். இதனை தொடர்ந்து போட்டி விறுவிறுப்புடன் நடந்தது. இதில், இந்திய அணி 4-3-3 என்ற வரிசையில் வீரர்களை நிறுத்தியிருந்தது. முன்கள வீரர்கள் வரிசையில் 3 பேர் இருந்தது அணி கோல் அடிக்க ஏதுவாக இருந்தது.

ஆனால், கம்போடிய தரப்பில் 5-3-2 என்ற வரிசையில் வீரர்கள் நிறுத்தப்பட்டனர். இதனால், இந்திய அணியினரால் களத்திற்குள் முன்னேறி கோல் அடிப்பது சற்று சவாலாகவே இருந்தது. கம்போடியா தரப்பில் தடுப்பு ஆட்டக்காரர்கள் வரிசையில் திறம்பட வீரர்கள் இருந்தது இந்திய அணியின் கோல் வேட்டைக்கு தடுப்பு அரணாக இருந்தது.

எனினும், இந்திய அணி சார்பில் கேப்டன் அந்த குறையை பூர்த்தி செய்துள்ளார். அவர் அடித்த இரண்டு கோல்களும் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு ஏதுவாக இருந்தது. ஆசிய கோப்பை தகுதி சுற்று கால்பந்து போட்டியில் கம்போடியாவை 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதனால், புளூ டைகர்ஸ் என அழைக்கப்படும் இந்திய அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்துள்ளன. சேத்ரி இதுவரை 82 சர்வதேச கோல்களை அடித்துள்ளார்.


Next Story