3 நாடுகள் கால்பந்து: வியட்நாம் அணியிடம் இந்தியா தோல்வி


3 நாடுகள் கால்பந்து: வியட்நாம் அணியிடம் இந்தியா தோல்வி
x

3 நாடுகள் இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் வியட்நாம் அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது.

ஹோ சி மின் சிட்டி,

வியட்நாம், இந்தியா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகள் இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி வியட்நாமில் உள்ள ஹோ சி மின் சிட்டியில் நடந்தது. இதில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, வியட்நாமை எதிர்கொண்டது.

இதில் வெற்றி பெற்றால் தான் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும் என்ற நெருக்கடியுடன் இந்திய அணியும், 'டிரா' செய்தாலே மகுடம் சூட முடியும் என்ற நிலையில் வியட்நாமும் களம் புகுந்தன.

உள்ளூர் ரசிகர்களின் உற்சாகத்துடன் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வியட்நாம் அணி இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்ததுடன் சாம்பியன் பட்டத்தையும் வசப்படுத்தியது.

அந்த அணியில் பான் வான் டு 10-வது நிமிடத்திலும், கயென் வான் டோன் 49-வது நிமிடத்திலும், கயென் வான் கொயெட் 70-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்திய அணி பதில் கோல் திருப்ப எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முதலாவது ஆட்டத்தில் சிங்கப்பூருடன் டிரா (1-1) செய்திருந்த இந்திய அணி 2-வது இடத்தை பெற்றது. சிங்கப்பூர் அணி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.


Next Story