பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய கேப்டனாக 24 வயது நட்சத்திர வீரர் எம்பாப்பே நியமனம்


பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய கேப்டனாக 24 வயது நட்சத்திர வீரர் எம்பாப்பே நியமனம்
x

கேப்டன் பதவியை ஏற்க எம்பாப்பே சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பாரீஸ்,

கடந்த ஆண்டு கத்தாரில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 2-4 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் தோல்வி கண்டு கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. இதைத் தொடர்ந்து பிரான்ஸ் அணியின் கேப்டனும், கோல்கீப்பருமான ஹூகோ லோரிஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய கேப்டனாக 24 வயது நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே பொறுப்பேற்க இருக்கிறார். அணியின் பயிற்சியாளர் டிடெர் டெஸ்சாம்ப்ஸ் கலந்து ஆலோசித்த பிறகு கேப்டன் பதவியை ஏற்க எம்பாப்பே சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

எம்பாப்பே பிரான்ஸ் அணிக்காக 66 ஆட்டங்களில் ஆடி 36 கோல்கள் அடித்து இருக்கிறார். உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் 'ஹாட்ரிக்' கோல்கள் அடித்த எம்பாப்பே அந்த போட்டி தொடரில் அதிக கோல் அடித்தவருக்கான (8 கோல்கள்) விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story