ஜூனியர் உலக கோப்பை கால்பந்து மகுடம் யாருக்கு? இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து–ஸ்பெயின் இன்று மோதல்
ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதல் முறையாக பட்டம் வெல்லும் ஆவலில் உள்ள இங்கிலாந்து – ஸ்பெயின் அணிகள் இறுதிப்போட்டியில் இன்று மல்லுகட்டுகின்றன.
கொல்கத்தா,
ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதல் முறையாக பட்டம் வெல்லும் ஆவலில் உள்ள இங்கிலாந்து – ஸ்பெயின் அணிகள் இறுதிப்போட்டியில் இன்று மல்லுகட்டுகின்றன.
ஜூனியர் கால்பந்துஇந்தியாவில் நடந்து வரும் 17–வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்து விட்டது. 24 அணிகள் பங்கேற்ற இந்த ‘மெகா’ கால்பந்து திருவிழாவில் லீக் மற்றும் நாக்–அவுட் சுற்று முடிவில் இங்கிலாந்தும், ஸ்பெயினும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. ஜூனியர் உலக கோப்பையில் இரு ஐரோப்பிய அணிகள் இறுதி சுற்றை எட்டியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில் இவ்விரு அணிகளில் சாம்பியன் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி கொல்கத்தா சால்ட்லேக் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு அரங்கேறுகிறது. 4–வது முறையாக ஜூனியர் உலக கோப்பையில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து அணி இறுதிசுற்றுக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும். அதே சமயம் ஸ்பெயின் அணி ஏற்கனவே 1991, 2003, 2007–ம் ஆண்டுகளில் இறுதி ஆட்டம் வரை வந்து தோற்று இருந்தது. அதனால் எந்த அணி வாகை சூடினாலும் அது அந்த அணிக்கு முதல் மகுடமாக இருக்கும்.
பலம் வாய்ந்த இங்கிலாந்துநடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இங்கிலாந்து வீரர்கள் இதுவரை 18 கோல்கள் போட்டு அமர்க்களப்படுத்தி இருப்பதுடன், துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் பிரேசிலை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தங்க ஷூ வாய்ப்பில் முன்னணியில் உள்ள நட்சத்திர வீரர் ரையான் பிரிஸ்டரைத் தான் (7 கோல்) இங்கிலாந்து அணி அதிகமாக நம்பி இருக்கிறது.
இரண்டு முறை ஹாட்ரிக் கோல் அடித்துள்ள பிரிஸ்டர் இன்றைய ஆட்டத்திலும் ‘கைவரிசை’யை காட்ட முழுவீச்சில் ஆயத்தமாக உள்ளார்.
இதுவரை 15 கோல்கள் அடித்துள்ள ஸ்பெயின் அணி, ஏற்கனவே மூன்று முறை கோப்பையை நழுவவிட்டதால் இந்த முறை அந்த சோகத்துக்கு விடைகொடுக்கும் உத்வேகத்துடன் காணப்படுகிறது. ஸ்பெயின் அணியில் கேப்டன் அபெல் ரூஸ் 5 கோல்கள் அடித்து கவனிக்கத்தக்க வீரராக வலம் வருகிறார்.
பழிவாங்குமா?கடந்த மே மாதம் நடந்த ஜூனியர் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி பெனால்டி ஷூட்–அவுட்டில் இங்கிலாந்தை சாய்த்து இருந்தது. அதற்கு வஞ்சம் தீர்க்கும் முனைப்புடன் இங்கிலாந்து வீரர்கள் வரிந்து கட்டுவார்கள் என்பதால் போட்டியில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.
இறுதிப்போட்டியை 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் கண்டுகளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த சாதனை எண்ணிக்கையாக 13 லட்சத்திற்கு மேல் ரசிகர்கள் கண்டுகளித்த உலக கோப்பை தொடராக இது அமையப்போகிறது.
3–வது இடத்துக்கான ஆட்டம்முன்னதாக மாலை 5 மணிக்கு 3–வது இடத்தை நிர்ணயிக்கும் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் பிரேசில் அணி, ஆப்பிரிக்க தேசமான மாலி அணியை எதிர்கொள்கிறது.
இரு ஆட்டங்களையும் சோனி டென்2, சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.