ஜூனியர் உலக கோப்பை கால்பந்து மாலி, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி


ஜூனியர் உலக கோப்பை கால்பந்து மாலி, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 22 Oct 2017 3:30 AM IST (Updated: 22 Oct 2017 1:55 AM IST)
t-max-icont-min-icon

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியின் கால்இறுதியில் மாலி, இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்தன.

கவுகாத்தி,

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வரும் 17-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது.

கவுகாத்தி நகரில் நேற்று மாலை நடந்த முதலாவது கால்இறுதியில் ஆப்பிரிக்க அணிகளான கானாவும், மாலியும் மல்லுகட்டின. மழைக்கு மத்தியில் நடந்த இந்த ஆட்டத்தில் மாலி அணி தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை கடைப்பிடித்தது. 2 முறை சாம்பியனான கானாவின் சிறந்த ஆட்டம் வெளிப்படவில்லை.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கடந்த முறை 2-வது இடம் பிடித்த மாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் கானாவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. மாலி அணியில் ஹட்ஜி டாமே 15-வது நிமிடத்திலும், டிஜ்மோசா தாரே 61-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கானா அணி தரப்பில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி முகமது 70-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.

கோவாவில் நேற்று இரவு நடந்த மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்து முதல் முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. இங்கிலாந்து அணியில் பிரிவ்ஸ்டர் 11-வது, 14-வது மற்றும் 90-வது நிமிடங்களில் கோல் அடித்தார். கிப்ஸ் ஒயிட் 64-வது நிமிடத்தில் கோல் திணித்தார். அமெரிக்க அணி தரப்பில் சார்ஜென்ட் 72-வது நிமிடத்தில் கோல் திருப்பினார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொச்சியில் மாலை 5 மணிக்கு நடைபெறும் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 3 முறை 2-வது இடம் பிடித்த ஸ்பெயின் அணி, ஈரானை எதிர்கொள்கிறது. ஐரோப்பிய சாம்பியன் ஸ்பெயின் அணி இந்த ஆட்டத்தில் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடக்கும் மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான பிரேசில் அணி, ஜெர்மனி அணியை சந்திக்கிறது. பிரேசில் அணி 2-வது சுற்று ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் ஹோண்டுராஸ் அணியை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. ஜெர்மனி அணி 2-வது சுற்று ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தது. வலுவான இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டத்தை காண அதிக ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு ஆட்டங்களையும் சோனி டென்2, சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Next Story