ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: ஸ்பெயின், ஈரான் அணிகள் கால்இறுதிக்கு முன்னேற்றம்


ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: ஸ்பெயின், ஈரான் அணிகள் கால்இறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 18 Oct 2017 4:15 AM IST (Updated: 18 Oct 2017 12:51 AM IST)
t-max-icont-min-icon

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின், ஈரான் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.

கவுகாத்தி,

இந்தியாவில் நடந்து வரும் 17-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் (17 வயதுக்குட்பட்டோர்) ‘நாக்-அவுட்’ (2-வது சுற்று) சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது.

இதில் கவுகாத்தியில் நேற்று மாலை நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சமபலம் வாய்ந்த பிரான்ஸ்-ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் கோல் அடிக்கும் முனைப்பில் தீவிர தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தனர். இதனால் ஆட்டம் தொடக்கம் முதலே பரபரப்பாக இருந்தது.

34-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் லென்னி பின்டர் இந்த கோலை அடித்தார். 44-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் ஜூயன் மிரன்டா பந்தை தலையால் முட்டி கோலுக்குள் அனுப்பினார். முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.

பின் பாதி ஆட்டத்திலும் இரு அணியினரும் கோல் அடிக்க ஆக்ரோஷமாக மோதினார்கள். இருப்பினும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்து பெனால்டி ஷூட்-அவுட்டை நோக்கி செல்வது போல் இருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் ஸ்பெயின் அணி வீரர் ஜோஸ் லாரா பந்துடன் கோலை நோக்கி முன்னேறிய போது அவரை பிரான்ஸ் வீரர் சோலெட் முரட்டுத்தனமாக செயல்பட்டு தள்ளிவிட்டார்.

இந்த செயல் தான் ஆட்டத்தின் தலைவிதியை நிர்ணயிப்பதாக அமைந்தது. உடனடியாக ஸ்பெயின் அணிக்கு பெனால்டி வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி ஸ்பெயின் அணி கேப்டன் அபெல் ரூய்ஸ் கோல் அடித்தார். முடிவில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை சாய்த்து கால்இறுதிக்கு முன்னேறியது.

கோவாவில் நடந்த மற்றொரு 2-வது சுற்று ஆட்டத்தில் ஈரான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் மெக்சிகோவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றது. ஈரான் அணி தரப்பில் அலாயர் சயத் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 7-வது நிமிடத்திலும், 11-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்து 2-0 என்ற கணக்கில் அணிக்கு முன்னிலையை தேடிக்கொடுத்தார். மெக்சிகோ அணி வீரர் ராபர்டோ டி லா ரோதா 37-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.

கொச்சியில் 22-ந் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின்-ஈரான் அணிகள் மோதுகின்றன.

இன்று (புதன்கிழமை) நடைபெறும் 2-வது சுற்று ஆட்டங்களில் கானா-நைஜர் (மாலை 5 மணி, மும்பை), பிரேசில்-ஹோண்டுராஸ் (இரவு 8 மணி, கொச்சி) அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை சோனி டென்-2, சோனி டென்-3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.

Next Story