உலகக்கோப்பையை வெல்வதற்கு உதவிய யுவராஜ் சிங்கிற்கு உரிய பாராட்டுகள் கிடைக்கவில்லை - கவுதம் கம்பீர்
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் யுவராஜ் சிங் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
புதுடெல்லி,
2011ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டு காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
அந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றி ஆல்-ரவுண்டராக ஜொலித்த யுவராஜ் சிங் (1 சதம், 4 அரைசதம் உள்பட 362 ரன் மற்றும் 15 விக்கெட்) தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், 2011 உலகக்கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய யுவராஜ் சிங்குக்கு போதுமான பாராட்டுகள் கிடைக்கவில்லை என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
'2011 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதினை வென்றது எல்லோருக்கும் தெரியும். இதுகுறித்து எத்தனை பேர் பேசினார்கள். யுவராஜ் சிங் குறித்து பேசாததற்கு காரணம் என்ன? அவரை விளம்பரப்படுத்திக் கொள்ள விளம்பர நிறுவனம் ஒன்று இல்லை என்பது காரணமாக இருக்கலாம்.
ஒரு போட்டி ஒளிபரப்பாளர் விளம்பர நிறுவனம்போல செயல்படக் கூடாது. வீரர்கள் அறையில் அமர்ந்து இருக்கும் அனைவருக்கும் போட்டி ஒளிபரப்பாளர் சரி சமமாக நடந்து கொள்ள வேண்டும். நான் இரண்டு வீரர்களில் ஒரு வீரரை 2 மணி நேரம் 50 நிமிடம் காட்டிவிட்டு, மற்றொரு வீரரை 10 நிமிடம் மட்டுமே காண்பித்தால், எந்த வீரர் அதிக நேரம் காட்டப்படுகிறாரோ அவர் ஒரு பிராண்ட் ஆக மாறி விடுவார்' என கூறினார்.