இளையோர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி : இந்திய அணிக்கு 353 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்
50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது
கொழும்பு,
இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வரும் இளையோர் (23 வயதுக்கு உட்பட்டோர்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன..
இறுதிப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் பாகிஸ்தான் அணி சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சைம் அயூப், சாஹிப்சாதா பர்ஹான் இருவரும் அரைசதம் அடித்தனர்.
பின்னர் சைம் அயூப் 59 ரன்களும் , சாஹிப்சாதா பர்ஹான் 65 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் உமைர் யூசுப் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுபுறம் தயப் தாஹிர் அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு விரட்டிய அவர் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய தயப் தாஹிர்108 ரன்களில் வெளியேறினார்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது.இந்தியா சார்பில் ரியான் பராக் , ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.