உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் கடந்து வந்த பாதை...!
இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் கடந்து வந்த பாதையை ஒரு தொகுப்பாக இந்தக் கட்டுரையில் காணலாம்.
லண்டன்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இரு ஆண்டுகள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அந்த வகையில் 2021-ம் ஆண்டு சவுத்தம்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குரிய காலக்கட்டமாக 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதில் 9 அணிகள் பங்கேற்று உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் மோதின. மொத்தம் 27 தொடர்களில் 69 டெஸ்டுகள் நடத்தப்பட்டன. டெஸ்ட் வெற்றிக்கு 12 புள்ளியும், டிராவுக்கு 4 புள்ளியும் வழங்கப்பட்டன.
இதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 66.67 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தையும், இந்தியா 58.80 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. 55.56 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்தை பெற்ற தென்ஆப்பிரிக்கா மயிரிழையில் வாய்ப்பை இழந்தது. நடப்பு சாம்பியன் நியூசிலாந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இவ்விரு அணிகளும் கடந்து வந்த பாதையை ஒரு தொகுப்பாக இந்தக் கட்டுரையில் காணலாம்.....
இந்தியா எப்படி?
முதல் தொடர்
2021-ம் ஆண்டு ஆகஸ்டில் இந்தியா தனது முதல் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆடியது. இந்த டெஸ்ட் தொடர் 5 போட்டிகளைக் கொண்டது. இந்தியா முதல் நான்கு போட்டிகளில் 2 வெற்றி, 1 தோல்வி, 1 டிரா என முன்னிலை வகித்தது. இந்த தொடரின் கடைசி ஆட்டம் 2022-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதியில் நடைபெற்றது. இந்தியா கடைசி ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால் 2-2 என தொடர் சமனில் முடித்தது.
நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி
நியூசிலாந்து இந்தியாவிற்கு வருகை தந்து 2 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. கான்பூரில் நடைபெற்ற முதல் ஆட்டம் டிராவில் முடித்தது. அடுத்த ஆட்டத்தில் நியூசிலாந்து அஸ்வினின் சுழலில் சிக்கியது. இதனால் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
தென்னாப்பிரிக்காவில் தோல்வி
தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற இந்திய அணி, அடுத்த 2 போட்டிகளில் தோற்றது.
இலங்கைக்கு ஒயிட்வாஷ்
2022ம் ஆண்டு இலங்கை அணி இந்தியா வந்தது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி முழுமையாக வென்றது.
வங்கதேசத்தில் அபாரம்
வங்கதேசத்திற்கு கடந்த ஆண்டு இறுதியில் சுற்றுப் பயணம் செய்தது இந்திய அணி. இந்த தொடரின் 2 டெஸ்டி போட்டியிலும் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி
இந்த ஆண்டு பிப்ரவரி முதல் மார்ச் வரை ஆஸ்திரேலிய அணியுடன் உள்நாட்டில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடியது. இதில் 2 வெற்றி, 1 தோல்வி, 1 டிரா என வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
ஆஸ்திரேலிய அணியின் பாதை
ஆஷஸ் தொடரில் அசத்தல்
2021-2022-ம் ஆண்டு சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா விளையாடியது. ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் இந்த தொடரினை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
பாகிஸ்தானில் ஆதிக்கம்
2022 மார்ச் மாதத்தில் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் செய்தது, ஆஸ்திரேலிய அணி. அங்கு நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது. ஆஸ்திரேலிய அணி,1998-ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக பாகிஸ்தானில் தொடரை வென்றது நினைவுகூறத்தக்கது.
இலங்கையில் டிரா
ஆஸ்திரேலிய அணி 2022-ம் ஆண்டு ஜூன் முதல் ஜூலை வரை இலங்கை மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இந்தத் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
வெஸ்ட் இண்டிஸ்க்கு ஒயிட்வாஷ்
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக உள்நாட்டு மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றது.
தென் ஆப்பிரிக்காவை சாய்த்தது
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதில் 2 வெற்றி, 1 டிரா அடங்கும்.
இந்தியாவிற்கு எதிராக....
இந்த ஆண்டு பிப்ரவரி-மார்ச்சில் இந்திய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது, ஆஸ்திரேலிய அணி. முதல் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் வெற்றி கண்டதால் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கடைசி ஆட்டம் டிரா ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் ஒரு வாரத்திற்கு மேலாக தீவிர பயிற்சி மேற்கொண்டனர். இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பொதுவான இடத்தில் மோதுவது இதுவே முதல் நிகழ்வாகும்.
இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் களத்தில் ஆக்ரோஷத்துக்கும், பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது. இவ்விரு அணிகள் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 32-ல் இந்தியாவும், 44-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 29 டெஸ்ட் டிரா மற்றும் ஒரு போட்டி சமனில் (டை) முடிந்தது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ரவீந்திர ஜடேஜா, கே.எஸ்.பரத் அல்லது இஷான் கிஷன், ஆர்.அஸ்வின் அல்லது ஷர்துல் தாக்குர், உமேஷ் யாதவ் அல்லது ஜெய்தேவ் உனட்கட், முகமது ஷமி, முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலன்ட்.
இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
மைதான கண்ணோட்டம்
லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய அணி 14 டெஸ்டில் விளையாடி 2-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும், 7-ல் டிராவும் கண்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி இங்கு 38 டெஸ்டுகளில் விளையாடி 7-ல் வெற்றியும், 17-ல் தோல்வியும், 14-ல் டிராவும் சந்தித்துள்ளது.
இங்கு இதுவரை மொத்தம் 104 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. பெரும்பாலும் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களிலேயே டெஸ்ட் போட்டி நடக்கும். அப்போது ஆடுகளம் வறண்டு சுழற்பந்து வீச்சுக்கு கணிசமாக ஒத்துழைக்கும். ஆனால் முதல்முறையாக இப்போது ஜூன் மாதத்தின் தொடக்கத்திலேயே டெஸ்ட் போட்டி நடக்க இருப்பதால் ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பதை கணிப்பதில் குழப்பம் நிலவுகிறது. இருந்தாலும் ஆடுகளம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சரிசமாக ஒத்துழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.