உலகக் கோப்பை மைதானங்கள் ஒரு கண்ணோட்டம்
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான ஆமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 5 ஆட்டங்கள் நடக்கின்றன.
புதுடெல்லி,
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 48 ஆட்டங்கள் இந்தியா முழுவதும் மொத்தம் 10 மைதானங்களில் நடைபெறுகிறது. இது மழை காலம் என்பதால் போட்டி சிக்கலின்றி நடக்க வருணபகவானின் கருணை அவசியமாகும். மழை குறுக்கீடு அதிக அளவில் இருக்கலாம் என்பதால் அதற்கு ஏற்ப அணிகளின் வியூகங்களும் இருக்கும். உலகக் கோப்பை போட்டி நடக்கும் மைதானங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம்
ஆமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம்:
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான இங்கு 5 ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இங்கிலாந்து- நியூசிலாந்து தொடக்க ஆட்டமும், பரம போட்டியாளர்கள் இந்தியா- பாகிஸ்தான் (அக்.14), ஆஷஸ் எதிரிகள் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து (நவ.4) மோதும் ஆட்டமும் முக்கியமானவை. இது ஒரு லட்சத்து 32 ஆயிரம் இருக்கை வசதி கொண்டது. ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ரசிகர்களின் முன்பு விளையாடுவது நிச்சயம் இந்திய வீரர்களுக்கு பரவசமூட்டும்.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம்:
குறைவான பவுண்டரி தூரத்தை கொண்ட இந்த மைதானம் ரன்வேட்டைக்கு உகந்தது. 40 ஆயிரம் இருக்கை வசதி கொண்டது. இங்கு 5 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதில் இந்தியா- நெதர்லாந்து, பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா மோதல் கவனத்தை ஈர்க்கிறது.
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம்:
சென்னையில் மொத்தம் 5 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இந்தியாவுக்குரிய முதல் ஆட்டம் இங்கு தான் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8-ந்தேதி) நடக்கின்றன. ஆஸ்திரேலியாவுக்கு இது ராசியாமான மைதானமாகும். இங்கு 6 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 5-ல் வெற்றி பெற்றுள்ளது. அதனால் இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. 50 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கலாம். இதே போல் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் மற்றும் தென்ஆப்பிரிக்காவுடன் மோத இருக்கிறது.
கொல்கத்தா ஈடன் கார்டன்:
66 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட புகழ்பெற்ற ெகால்கத்தா ஈடன்கார்டனில் அரைஇறுதி உள்பட 5 ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா மோதும் ஆட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
மும்பை வான்கடே :
2011-ம்ஆண்டு உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம் நடந்த இங்கு இந்த முறை 5 ஆட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு அரைஇறுதியும் அடங்கும். இங்குள்ள ரசிகர்கள் இந்தியா- இலங்கை ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
இதே போல் டெல்லி (5 ஆட்டம்), லக்னோ (5), புனே (5), ஐதராபாத் (3), மலைவாசஸ்தலமான தர்மசாலா (5) ஆகிய இடங்களிலும் போட்டிகள் நடக்கின்றன.
நாளை தொடங்கும் உலகக் கோப்பை போட்டிக்கு ஆமதாபாத் தயார்
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி ஆமதாபாத் மைதானம் தயார் நிலையில் உள்ளது. நாளைய தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் (பிற்பகல் 2 மணி) பலப்பரீட்சை நடத்துகின்றன.
முன்னதாக இன்று இரவு 7 மணிக்கு கண்கவர் கலைநிகழ்ச்சியுடன் தொடக்க விழா நடக்க இருப்பதாகவும், பாலிவுட் நட்சத்திரங்களின் ஆடல் பாடல் இடம் பெற இருப்பதாகவும் கிரிக்கெட் வாரிய வட்டார தகவல்கள் தெரிவித்தன. ஆனால் தொடக்க விழாவை நடத்தும் முடிவை இந்திய கிரிக்கெட் வாரியம் திடீரென கைவிட்டு விட்டது. 10 அணிகளின் கேப்டன்கள் சந்திப்பு மட்டும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முதல் ஆட்டத்திற்கு முன்பாக இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் உலகக் கோப்பையுடன் மைதானத்திற்குள் நுழைந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். அதைத் தொடர்ந்து போட்டி தொடங்கும். தெண்டுல்கர் உலகக் கோப்பை போட்டிக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.