உலகக்கோப்பை கிரிக்கெட்; வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் வில்லியம்சன் களம் இறங்க உள்ளார் - தகவல்

image courtesy;ICC
உலகக்கோப்பை தொடரில் முதல் 2 ஆட்டங்களில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் களம் இறங்கவில்லை.
சென்னை,
13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அரைஇறுதியை எட்டுவதற்கு குறைந்தது 6 வெற்றிகள் அவசியமாகும்.
இதில் பங்கேற்றுள்ள நியூசிலாந்து அணி முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதல் 2 ஆட்டங்களில் விளையாடவில்லை. டாம் லதம் அணியை வழி நடத்தினார்.
இந்நிலையில் நாளை சென்னையில் நடைபெறும் வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் வில்லியம்சன் களம் இறங்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.