மகளிர் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா


மகளிர் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா
x

Image Courtesy: PTI

இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் சென்னையில் நடைபெற்றது.

சென்னை,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, முதல் இன்னிங்சில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.

அடுத்து, தனது முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 266 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் ரானா சிறப்பாக பந்துவீசி 8 விக்கெட்டும், தீப்தி சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் பாலோ ஆன் பெற்ற தென் ஆப்பிரிக்கா தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லாரா வோல்வார்ட் மற்றும் அன்னேக் போஷ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அன்னேக் போஷ் 9 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து லாரா வோல்வார்ட் உடன் சூன் லூஸ் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சூன் லூஸ் சதமடித்து 109 ரன்னில் அவுட்டானார். இறுதியில் மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்திருந்தது. லாரா வோல்வார்ட் 93 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

இந்நிலையில் 4ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி தனது 2வது இன்னிங்சில் 154.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 373 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் லாரா வோல்வார்ட் 122 ரன், சூன் லூஸ் 109 ரன் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஸ்னே ரானா, தீப்தி ஷர்மா, ராஜேஷ்வரி கெய்க்வாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 36 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து 37 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 9.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 37 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.


Next Story