பெண்கள் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனா ஆடுவது சந்தேகம்...காரணம் என்ன?


பெண்கள் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனா ஆடுவது சந்தேகம்...காரணம் என்ன?
x

10 அணிகள் பங்கேற்கும் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் இன்று தொடங்குகிறது.

கேப்டவுன்,

10 அணிகள் பங்கேற்கும் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் இன்று தொடங்குகிறது. தொடக்க லீக்கில் தென்ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் மோதுகின்றன. பெண்களுக்கான 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2009-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இதன்படி 8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது.

கடந்த ஆண்டு இறுதியில் நடக்க இருந்த இந்த போட்டி உலகக் கோப்பை கால்பந்து போட்டி காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இப்போது நடக்கிறது. மொத்தம் 23 ஆட்டங்கள் கேப்டவுன், பார்ல், கெபேஹா ஆகிய நகரங்களில் அரங்கேறுகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்தும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை மறுநாள் சந்திக்கிறது. இந்நிலையில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இந்திய அணியின் துணை கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான ஸ்மிருதி மந்தனா பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆடிய போது அவரது இடது கையின் நடுவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரது காயம் இன்னும் முழுமையாக குணமாக வில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் அவர் களம் இறங்குவாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.


Next Story