பெண்கள் டி20 கிரிக்கெட்; 2வது போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
நெல்சன்,
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஹீதர் நைட் 56 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து தரப்பில் ரோஸ்மேரி மெய்ர், ஷோபி டெவைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து தரப்பில் லாரன் பெல், சார்லோட் டீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது.