ரிச்சா கோஸ் அதிரடி வீண்: பெங்களூருவுக்கு எதிராக டெல்லி அணி திரில் வெற்றி


ரிச்சா கோஸ் அதிரடி வீண்: பெங்களூருவுக்கு எதிராக டெல்லி அணி திரில் வெற்றி
x

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி திரில் வெற்றியை பதிவு செய்தது.

புதுடெல்லி,

2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு - டெல்லி அணிகள் விளையாடின. அதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியினர், பெங்களூர் அணியின் பந்து வீச்சை திறம்பட சமாளித்து ரன்களை குவித்தனர். முடிவில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார். பெங்களூரு அணி தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் சார்பில் களமிறங்கிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கி அதிரடியாக ரன் சேர்த்துக் கொண்டிருந்த பெர்ரி 49 ரன்களில் ரன் அவுட் ஆனார். அவரைத்தொடர்ந்து மோலினக்ஸ் 33 ரன்களும், சோபி டிவைன் 26 ரன்களும், வாரிகாம் 12 ரன்களும், திஷா கேசாட் (0) ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.

மறுமுனையில் தங்கள் அணிக்காக போராடிய ரிச்சா கோஸ், தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். முடிவில் ஒரு பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழலில், ரிச்சா கோஸ் 51 ரன்களில் ரன் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

முடிவில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி திரில் வெற்றியை பதிவு செய்தது.

தற்போது மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடஸ் அணி ஆகியவை 2-வது பெண்கள் பிரீமியர் லீக் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.


Next Story