பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: ருவாண்டா அணி முதல் வெற்றி
ருவாண்டா அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் முதலாவது வெற்றியை ருசித்தது.
போட்செப்ஸ்ட்ரூம்,
பெண்களுக்கான முதலாவது ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள ருவாண்டா அணி நேற்று போட்செப்ஸ்ட்ரூமில் நடந்த லீக்கில் ஜிம்பாப்வேயுடன் மோதியது. முதலில் பேட் செய்த ருவாண்டா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் கிசேல் இஷிம்வி 34 ரன்கள் எடுத்தார். எக்ஸ்டிரா வகையில் 15 வைடு உள்பட 20 ரன்கள் கிட்டியது.
அடுத்து களம் இறங்கிய ஜிம்பாப்வே 18.4 ஓவர்களில் 80 ரன்னில் சுருண்டது. வேகப்பந்து வீச்சாளர் ஹென்ரிட் இஷிம்வி, ஆட்டத்தின் 19-வது ஓவரில் முதல் 4 பந்துகளையும் யார்க்கராக வீசி தொடர்ச்சியாக 4 விக்கெட்டுகளை கபளீகரம் செய்து சாதனை படைத்ததுடன் வெற்றிக்கும் வித்திட்டார்.
நடப்பு உலகக் கோப்பையில் ஒரு பவுலரின் 2-வது ஹாட்ரிக் இதுவாகும். இதன் மூலம் ருவாண்டா அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் முதலாவது வெற்றியை ருசித்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ருவாண்டா பெற்ற முதல் வெற்றி இது தான்