பெண்கள் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி


பெண்கள் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி
x

பெண்கள் ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றியோடு தொடங்கியுள்ளது.

பெனோனி,

பெண்கள் ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றியோடு தொடங்கியுள்ளது.

ஜூனியர் உலகக் கிரிக்கெட்

பெண்களுக்கான முதலாவது ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகளில் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இலங்கை, அமெரிக்கா, 'பி' பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், ருவாண்டா, ஜிம்பாப்வே, 'சி' பிரிவில் அயர்லாந்து, இந்தோனேசியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், 'டி' பிரிவில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் அங்கம் வகிக்கும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

ஷபாலி, சுவேதா கலக்கல்

தொடக்க நாளான நேற்று இந்தியஅணி தனது முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை (டி பிரிவு) பெனோனி நகரில் எதிர்கொண்டது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சிமோன் லோரென்ஸ் 61 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ஷபாலி வர்மா 2 விக்கெட் சாய்த்தார்.

அடுத்து 167 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷபாலி வர்மாவும், சுவேதா செராவத்தும் களம் புகுந்தனர். தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை வறுத்தெடுத்த இவர்கள் ரன்மழை பொழிந்தனர். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் நினியின் ஒரே ஓவரில் ஷபாலி வர்மா 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என்று 26 ரன் விளாசி மிரள வைத்தார். ஷபாலி 45 ரன்களில்(16 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த கொங்கடி திரிஷா 15 ரன்னிலும், சவும்யா திவாரி 10 ரன்னிலும் வெளியேறினர். மறுமுனையில் சுவேதா செராவத் 92 ரன்கள் (57 பந்து, 20 பவுண்டரி) திரட்டி வெற்றிக்கு வித்திட்டார்.

இந்திய அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 170 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதுகிறது.

ஆஸ்திரேலியா தோல்வி

இன்னொரு ஆட்டத்தில் (ஏ பிரிவு) ஆஸ்திரேலிய அணி, வங்காளதேசத்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 130 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் 18 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது.

மற்ற ஆட்டங்களில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவையும், ஐக்கிய அரபு அமீரகம் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தையும் தோற்கடித்தது.


Next Story