மகளிர் கிரிக்கெட்: நடுவர் கொடுத்த முடிவால் சிரிப்பலை - வைரலாகும் வீடியோ


மகளிர் கிரிக்கெட்: நடுவர் கொடுத்த முடிவால் சிரிப்பலை - வைரலாகும் வீடியோ
x

தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

சிட்னி,

தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே முதலில் நடந்த டி20 தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் கடந்த 3ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டம் 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 45 ஓவர்கள் 6 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 29.3 ஓவர்களில் 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. கடைசி ஒருநாள் போட்டி வரும் 10-ந் தேதி நடக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் கள நடுவர்களாக கிளாரி போலோசாக், எலோயிஸ் ஷெரிடன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்த போது 23-வது ஓவரை ஆஸ்திரேலிய அணியின் கார்ட்னர் வீசினார். அப்போது சுனே லூசுக்கு எல்.பி.டபிள்யூ அப்பில் கேட்டக்கப்பட்டது. கள நடுவரான கிளாரி போலோசாக் நாட் அவுட் கொடுத்தார். உடனே ஆஸ்திரேலியா தரப்பில் ரிவ்யூ கேட்கப்பட்டது. முடிவில் பந்து ஸ்டெம்ப்பின் ஆப் திசையில் சென்றது.

இது மைதானத்தில் இருந்த திரையில் தெளிவாக தெரிந்தது. இதனை பார்த்த ஆஸ்திரேலிய வீராங்கனைகள் சோகமாக சென்றனர். தென் ஆப்பிரிக்கா வீராங்கனை மகிழ்ச்சி அடைந்தனர். அந்த நிலையில் உடனே நடுவர் கிளாரி போலோசாக் யாரும் எதிர்பாராத வகையில் அவுட் கொடுத்தார். இதனால் மைதானத்தில் இருந்த வீராங்கனைகள் சிரித்தனர். இதனை உணர்ந்த நடுவர் சிரித்து கொண்டே முடிவை மாற்றினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Next Story