மகளிர் ஆசிய கோப்பை: நேபாளத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
மகளிர் ஆசிய கோப்பை தொடரின் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறி அசத்தியுள்ளது.
தம்புல்லா,
9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், 'பி' பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன.
லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஷபாலி வர்மாவின் அதிரடியால் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 81 ரன்கள் குவித்தார். நேபாளம் தரப்பில் அதிகபட்சமாக சீதா ராணா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 179 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நேபாளம் அணியின் வீராங்கனைகள் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியில் ஒரு வீராங்கனைகள் கூட 20 ரன்கள் அடிக்கவில்லை. 20 ஓவர்கள் தாக்குப்பிடித்த அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 'ஏ பிரிவில்' முதலிடம் பிடித்த இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
நேபாளம் தரப்பில் அதிகபட்சமாக சீதா ராணா மகர் 18 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளும், அருந்ததி ரெட்டி மற்றும் ராதா யாதவ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.