பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை: இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை


பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை: இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை
x

image courtesy: Australian Women's Cricket Team twitter

பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இன்று ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

கேப்டவுன்,

8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் கடந்த 10-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியாவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் (ஏ பிரிவு), வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து (பி பிரிவு) அணிகள் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.

முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 5 ரன் வித்தியாசத்தில் இந்தியாவையும், இரண்டாவது அரைஇறுதியில் தென்ஆப்பிரிக்க அணி 6 ரன் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

உலகக் கோப்பையை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி கேப்டவுனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து 7-வது முறையாக இறுதிப்போட்டியை எட்டி இருக்கிறது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கில் அலிசா ஹீலி, கேப்டன் மெக் லானிங், பெத் மூனி, தாலியா மெக்ராத்தும், பந்து வீச்சில் மேகன் ஸ்கட், டார்சி பிரவுன், ஜார்ஜியா வார்ஹாம், எலிஸ் பெர்ரியும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஆல்-ரவுண்டராக ஆஷ்லி கார்ட்னெர் அசத்துகிறார்.

தோல்வியையே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருக்கும் ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் வேட்கையுடன் உள்ளது. அந்த அணியில் ஒருவர் சோபிக்காமல் போனால் அதனை சரிசெய்யும் வகையில் மற்றொருவர் அபாரமாக செயல்பட்டு அணிக்கு வலுசேர்ப்பது சிறப்பம்சமாகும்.

சன் லூஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்து இருக்கிறது. லீக் சுற்றில் வங்காளதேசம், நியூசிலாந்தை தோற்கடித்த தென்ஆப்பிரிக்க அணி இலங்கை (3 ரன் வித்தியாசம்), ஆஸ்திரேலியாவிடம் (6 விக்கெட் வித்தியாசம்) வீழ்ந்தது. அரைஇறுதியில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்திய உத்வேகத்துடன் தென்ஆப்பிரிக்கா இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தமட்டில் பேட்டிங்கில் தஸ்மின் பிரிட்ஸ், லாரா வோல்வார்த், சோலே டிரையானும், பந்து வீச்சில் காகா, ஷப்னிம் இஸ்மாயில், லபாவும் வலு சேர்க்கிறார்கள். ஆல்-ரவுண்டராக மரிஜானே காப் அருமையாக செயல்பட்டு வருகிறார். லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து முதல்முறையாக கோப்பையை கையில் ஏந்த தென்ஆப்பிரிக்க அணி வரிந்து கட்டும் என்பதில் சந்தேகமில்லை. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அந்த அணிக்கு அனுகூலமாக இருந்தாலும், வலுவான ஆஸ்திரேலிய அணியின் சவாலை சமாளிக்க வேண்டுமானால் தென்ஆப்பிரிக்க அணியினர் ஒரு சேர தங்களது உயர்வான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் எல்லா ஆட்டங்களிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி வாகை சூடி இருக்கிறது. இதனால் இந்த ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய அணியின் கையே ஓங்க அதிக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

ஆஸ்திரேலியா: அலிசா ஹீலி, பெத் மூனி, மெக் லானிங் (கேப்டன்), ஆஷ்லி கார்ட்னெர், கிரேஸ் ஹாரிஸ், எலிஸ் பெர்ரி, தாலியா மெக்ராத், ஜார்ஜியா வார்ஹாம், ஜோனஸ்சென், மேகன் ஸ்கட், டார்சி பிரவுன்.

தென்ஆப்பிரிக்கா: லாரா வோல்வார்த், தஸ்மின் பிரிட்ஸ், மரிஜானே காப், சோலே டிரையான், நாடின் டி கிளெர்க், சன் லூஸ் (கேப்டன்), அனிகி பாஸ்க், சினாலோ ஜாப்டா, ஷப்னிம் இஸ்மாயில், காகா, லபா.

இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story