ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றுமா இந்திய அணி? - கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றுமா இந்திய அணி? - கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்லும் உத்வேகத்துடன் உள்ள இந்திய அணி இன்று கடைசி டெஸ்டில் களம் இறங்குகிறது.

ஆமதாபாத்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூர், டெல்லியில் நடந்த முதல் இரு டெஸ்டுகளில் இந்தியாவும், இந்தூரில் நடந்த 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

இதுவரை நடந்துள்ள 3 டெஸ்டுகளிலும் ஆடுகளம் முதல் நாளில் இருந்தே சுழற்பந்து வீச்சுக்கு சொர்க்கமாக திகழ்ந்ததால் பேட்ஸ்மேன்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டாடினர். 3 போட்டியும் 3 நாட்களுக்குள் முடிவுக்கு வந்தது. இதில் இந்தூர் டெஸ்டுக்குரிய ஆடுகளத்தன்மை மோசம் என்று முத்திரை குத்திய ஐ.சி.சி. போட்டி நடுவர், 3 தகுதி இழப்பு புள்ளியும் விதித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனால் கடைசி டெஸ்ட் போட்டிக்குரிய ஆடுகளம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டுக்கும் சரிசம வாய்ப்பு அளிக்கும் வகையில் இருக்குமா அல்லது மறுபடியும் சுழல் ஜாலத்துக்கு ஒத்துழைக்கும் வகையில் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக சிவப்பு மண் மற்றும் கருப்பு மண் நிறத்தில் இரண்டு ஆடுகளங்கள் தயார் செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் ஒன்று இன்றைய டெஸ்டுக்கு பயன்படுத்தப்படுகிறது. அனேகமாக இதுவும் சுழற்பந்து வீச்சுக்கே அனுகூலமாக இருக்கும் என்று தெரிகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

இந்த டெஸ்ட் போட்டியின் முடிவு இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் தான் ஜூன் மாதம் லண்டனில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற முடியும். மாறாக தோல்வியை தழுவினால் இலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும்.

கடந்த டெஸ்டில் 109 மற்றும் 163 ரன்னில் சுருண்ட இந்திய அணி எழுச்சி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

நடப்பு தொடரில் இந்தியாவின் பேட்டிங்கை பொறுத்தவரை விராட் கோலி ஒரு அரைசதம் கூட அடிக்காதது பெருத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கேப்டன் ரோகித் சர்மா (ஒரு சதம் உள்பட 207 ரன்), ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் (185 ரன்) மட்டுமே குறிப்பிடத்தக்க வகையில் பேட்டிங்கில் பங்களிப்பை வழங்கியுள்ளனர். 3-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் போராடி புஜாரா எடுத்த அரைசதமும் (59 ரன்) மெச்சும்படி இருந்தது. மற்ற வீரர்களும் ஒரு சேர கைகொடுத்தால் ஆஸ்திரேலியாவை எளிதில் முடக்கி விடலாம்.

இதே போல் முதல் இரு டெஸ்டுகளில் கலக்கிய சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா (21 விக்கெட்), அஸ்வின் (18 விக்கெட்) இந்தூர் டெஸ்டில் தடுமாறிப்போனார்கள். அவர்கள் மீண்டும் தங்களது சுழல்தாக்குதலில் மிரட்ட வியூகங்களை தீட்டி வருகிறார்கள். கடந்த டெஸ்டில் ஓய்வு எடுத்த வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி அணிக்கு திரும்புவது பந்துவீச்சை வலுப்படுத்தும்.



நம்பிக்கையில் ஆஸ்திரேலியா

தாயாருக்கு உடல்நலக்குறைவால் தாயகம் புறப்பட்டு சென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் இன்னும் திரும்பவில்லை. குடும்பத்தினருடன் தொடர்ந்து தங்கி இருக்க முடிவு செய்திருப்பதால் இந்த டெஸ்டிலும் ஆஸ்திரேலிய அணியை ஸ்டீவன் சுமித் வழிநடத்த உள்ளார். நாக்பூர், டெல்லி டெஸ்டுகளில் தள்ளாடிய ஆஸ்திரேலிய அணி 3-வது டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனின் அட்டகாசமான பந்துவீச்சால் மீண்டெழுந்தது. அவர் 2-வது இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை சாய்த்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்டார். இதனால் புத்துணர்ச்சி அடைந்துள்ள ஆஸ்திரேலிய அணியினர் கூடுதல் நம்பிக்கையுடன் இன்றைய டெஸ்டில் கால்பதிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஆஸ்திரேலிய அணியில் மார்னஸ் லபுஸ்சேன் (178 ரன்), உஸ்மான் கவாஜா (153 ரன்) தவிர மற்றவர்களின் பேட்டிங் பெரிய அளவில் இல்லை. அந்த அணியும் நாதன் லயன் (19 விக்கெட்), டாட் மர்பி (11 விக்கெட்), மேத்யூ குனேமேன் (8 விக்கெட்) போன்ற சுழற்பந்து வீச்சாளர்களை தான் மலை போல் நம்பி இருக்கிறது. இந்த டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை இழக்காமல் இருப்பதுடன், டெஸ்ட் தரவரிசையில் 'நம்பர் ஒன்' இடத்தையும் தக்க வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர். எனவே இந்த டெஸ்டில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.



ஆடுகளம் குறித்து சுமித் பேட்டி

ஆஸ்திரேலிய பொறுப்பு கேப்டன் ஸ்டீவன் சுமித் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'இந்த மைதானத்தில் இதுவரை நான் 4 ஆடுகளத்தை பார்த்து விட்டேன். அவை அனைத்துமே முதல் நாளில் பேட்டிங்குக்கு உகந்த மாதிரியே தோன்றுகிறது. இங்கு வெயிலின் தாக்கம் ரொம்ப அதிகம். தற்போது 100 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்துகிறது. அதனால் ஆடுகளம் வறண்டு தான் இருக்கும். ஆனால் ஆடுகள பராமரிப்பாளர்களில் ஒருவர் மீண்டும் ஒரு முறை ஆடுகளத்தில் தண்ணீர் ஊற்ற வாய்ப்பு இருப்பதாக கூறினார். அதனால் ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முதல் 3 டெஸ்டுகளுடன் ஒப்பிடும் போது இந்த ஆடுகளம் கொஞ்சம் வேறு மாதிரி இருக்கலாம். அனேகமாக முதல் பந்தில் இருந்தோ அல்லது முதல் நாளில் இருந்தோ அளவுக்கு அதிகமாக பந்து சுழன்று திரும்பாது என்று நினைக்கிறேன். ஆனால் போக போக, சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கலாம். இதனால் இந்த ஆடுகளத்தில் பெரிய ஸ்கோர் குவிக்கப்படலாம்.

ஆடுகளம் குறித்து நாங்கள் ஒரு போதும் புகார் சொல்வதில்லை. எங்களுக்கு என்ன ஆடுகளம் தரப்பட்டுள்ளதோ அதில் சிறப்பாக செயல்பட முயற்சிப்பதே எங்களது பணி. தனிப்பட்ட முறையில் சொல்வது என்றால் இது போன்ற கடினமான ஆடுகளங்களில் தான் நான் உற்சாகமாக பேட்டிங் செய்கிறேன்' என்றார்.



மைதான கண்ணோட்டம்

ஆமதாபாத் மைதானத்தில் இதுவரை 14 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் 6-ல் வெற்றி பெற்ற இந்தியா 2-ல் தோல்வியும், 6-ல் டிராவும் கண்டுள்ளது. 2021-ம் ஆண்டு இங்கு இந்தியா- இங்கிலாந்து இடையே இரு டெஸ்ட் போட்டிகள் நடந்தன. இதில் ஒரு டெஸ்ட் 2 நாளிலும், மற்றொன்று 3 நாளிலும் முடிந்தது. இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்றது. அத்துடன் மொத்தம் சரிந்த 60 விக்கெட்டுகளில் 48 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்கள் வேட்டையாடினர் என்பது நினைவுகூரத்தக்கது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் 20 விக்கெட் வீழ்த்தியதும் அடங்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, கே.எஸ்.பரத் அல்லது இஷான் கிஷன், அஸ்வின், அக்ஷர் பட்டேல், முகமது ஷமி, உமேஷ் யாதவ் அல்லது முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், டாட் மர்பி, நாதன் லயன், குனேமேன்.

காலை 9.30 மணிக்கு...

கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ள இந்த டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.



ரவிசாஸ்திரிக்கு ரோகித் சர்மா பதிலடி

இந்திய அணி இந்தூரில் நடந்த 3-வது டெஸ்டில் இரு இன்னிங்சிலும் 200 ரன்னுக்குள் அடங்கியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. வீரர்கள் அதீத நம்பிக்கையுடன் மெத்தனமாக விளையாடியதால் தோல்வி ஏற்பட்டதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சித்தார். இது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரோகித் சர்மா கூறியதாவது:-

நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், முதல் இரு டெஸ்டுகளில் வெற்றி பெறும் போது, வெளியில் இருப்பவர்கள் நாங்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று நினைத்து இருந்தால் நிச்சயம் அது அபத்தமான ஒன்று. ஏனெனில் நாங்கள் 4 போட்டிகளிலும் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவே விரும்புகிறோம். வெறும் 2 டெஸ்டுகளில் வெற்றி பெற்று விட்டு அத்துடன் நிறுத்திக் கொள்ள விரும்பமாட்டீர்கள்.

வீரர்களின் ஓய்வறையில் என்ன நடக்கிறது, போட்டிக்கு முன்பாக என்ன பேசிக்கொள்கிறோம் என்று எதுவும் தெரியாமல் சிலர் நாங்கள் அதிக நம்பிக்கையுடன் இருப்பதாக கூறி வருகிறார்கள். எங்களை பொறுத்தவரை எல்லா ஆட்டத்திலும் அசத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். மற்றபடி அதீத நம்பிக்கையுடன் இருப்பது போன்றோ அல்லது வேறு மாதிரியோ வெளியில் இருப்பவர்களுக்கு தோன்றினால் அது பற்றி எங்களுக்கு கவலையில்லை. ரவிசாஸ்திரி ஏற்கனவே இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்திருக்கிறார். அவருக்கு வீரர்கள் என்ன மனநிலையில் இருப்பார்கள், எப்படி தயாராவார்கள் என்பது தெரியும். அப்படி இருந்தும் அவர் இவ்வாறு பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இரக்கமின்றி கடுமையாக விளையாட வேண்டும் என்ற ஒரு வார்த்தை மட்டுமே மனதில் இருக்கிறதே தவிர அதீக நம்பிக்கை அல்ல. எதிரணிக்கு துளி கூட வாய்ப்பு வழங்கி விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் வெளிநாட்டில் சென்று விளையாடும் போது எதிரணி வீரர்கள் எங்களை அப்படித் தான் எதிர்கொள்வார்கள். நாங்களும் அதே அணுகுமுறையை கையாளுகிறோம் என்று ரோகித் சர்மா கூறினார்.



போட்டியை பார்க்கும் இரு நாட்டு பிரதமர்கள்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான ஆமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் ஒரு லட்சத்து 32 ஆயிரம் இருக்கை வசதி கொண்டது. இந்த டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தை ஏறக்குறைய 1 லட்சம் ரசிகர்கள் கண்டுகளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு விருந்தினர்களாக பிரதமர் நரேந்திரமோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசும் முதல் நாள் ஆட்டத்தை நேரில் பார்க்க உள்ளனர். அவர்கள் பேட்டரி காரில் மைதானத்தில் சுற்றி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர்களின் வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story