டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலிக்கு பதிலாக இவரை 3-வது இடத்தில் களம் இறக்கலாம் - பிரையன் லாரா


டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலிக்கு பதிலாக இவரை 3-வது இடத்தில் களம் இறக்கலாம் - பிரையன் லாரா
x

Image Courtesy : IPL 

தினத்தந்தி 8 May 2024 3:07 PM IST (Updated: 8 May 2024 3:53 PM IST)
t-max-icont-min-icon

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி (இந்திய நேரப்படி ஜூன் 2ம் தேதி) முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்து வருகின்றன.

ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஓமன், அமெரிக்கா, உகாண்டா, ஸ்காட்லாந்து போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன.

இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்ட சீனியர் வீரர்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங் போன்ற இளம் வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் சுமார் 20 நாட்களே உள்ள நிலையில் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள், அணிகளின் ஆடும் லெவனில் இடம் பெறக்கூடிய வீரர்கள் குறித்து தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாரா இந்திய அணியின் 3வது வரிசையில் விராட் கோலிக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறங்குவது இந்தியாவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

நீங்கள் விரும்புவீர்களா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் என்னுடைய ஒரு ஆலோசனை என்னவெனில் சூர்யகுமார் 3-வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும். அவர் டி20 கிரிக்கெட்டில் மகத்தான வீரர்களில் ஒருவர். விவ் ரிச்சர்ட்ஸ் போன்ற வீரர்களிடம் பேசும் போது அவர் முன்கூட்டியே களத்தில் விளையாடுவதை விரும்புவதாக சொல்வார்.

சூர்யகுமார் விஷயத்திலும் நானும் அதையே உணர்கிறேன். அவரை முடிந்தளவுக்கு முன்கூட்டியே களமிறக்க முயற்சிக்க வேண்டும். அவர் துவக்க வீரர் கிடையாது. எனவே முன்கூட்டியே களமிறங்கி 10 - 15 ஓவர்கள் வரை அவர் பேட்டிங் செய்தால் போட்டி எப்படி மாறும் என்பது உங்களுக்கு தெரியும்.

நீங்கள் முதலில் பேட்டிங் செய்தாலும் அல்லது சேசிங் செய்தாலும் கொஞ்சம் முன்கூட்டியே களமிறங்கினால் அவர் உங்களை அசைக்க முடியாத நிலைக்கு எடுத்துச் செல்வார். அது மற்றவர்கள் தங்களுடைய இடத்தில் சிறப்பாக விளையாடுவதற்கான வாய்ப்பை கொடுக்கும். எனவே அவரை 3வது இடத்தில் விளையாட வைப்பதற்கான வழியை கண்டறியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story