அடுத்த ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்காக பொல்லார்டு விளையாடுவாரா: முன்னாள் இந்திய வீரரின் பதில்


அடுத்த ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்காக பொல்லார்டு விளையாடுவாரா: முன்னாள் இந்திய வீரரின் பதில்
x

அதிரடி ஆல் ரவுண்டர் கிரன் பொல்லார்ட் மும்பை அணிக்காக இந்த சீசனில் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

மும்பை,

ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு தொடரில் லீக் சுற்றுடன் நடையை கட்டியது. 14 போட்டிகளில் வெறும் நான்கு வெற்றிகளுடன் அட்டவணையில் கடைசி இடத்தைப் பிடித்து மிகவும் மோசமான சீசனாக மும்பை அணிக்கு இருந்தது.

இந்த சீசனில் மும்பை அணி வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்று கூறினாலும், ஆல்ரவுண்டர்களான பாண்ட்யா சகோதரர்கள் இல்லாதது மற்றும் சூர்யகுமார் யாதவ் தொடரின் பிற்பாதியில் விலகியது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.

கேப்டன் ரோகித் சர்மாவும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதே நேரத்தில் மேற்கு இந்திய தீவுகளை சேர்ந்த அதிரடி ஆல் ரவுண்டர் கிரன் பொல்லார்டுவும் இந்த சீசனில் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

அவர் இந்த சீசனில் 11 போட்டிகளில் விளையாடி வெறும் 144 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதனால், கடைசி மூன்று ஆட்டங்களில் அவர் ஆடும் லெவன் அணியில் இடம் பெறவில்லை. பொல்லார்டின் மோசமான பார்ம் காரணமாக அவர் அடுத்த ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்காக விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா, பொல்லார்டை மும்பை அணியில் இருந்து விடுவித்து விட வேண்டும் என்று கூறியுள்ளார். அவரின் மோசமான ஆட்டத்தின் காரணமாக மும்பை அணி அவரை தக்கவைக்கக்கூடாது என்று கூறிய அவர், முருகன் அஷ்வினையும் விடுவித்துவிடலாம் என்றும் கூறியுள்ளார்.

ஐபிஎல்லில் ஒரே ஒரு உரிமைக்காக விளையாடிய சில வீரர்களில் பொல்லார்டு ஒருவர். 2010 முதல் மும்பை அணிக்காக விளையாடி வரும் அவர் இதுவரை மும்பை அணிக்காக 189 ஆட்டங்களில் விளையாடி 28.6 சராசரியில் 3,412 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 16 அரைசதங்கள் அடங்கும். 2010ல் மீண்டும் உரிமையுடன் இணைந்த அவர் 69 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். மும்பை அணி கைப்பற்றியை ஐந்து பட்டங்களின் போதும் பொல்லார்டு இருந்துள்ளார்.

35 வயதான அவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். பொல்லார்ட் அடுத்த சீசனில் மும்பை அணிக்காக விளையாடுவாரா இல்லையா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


Next Story