பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைக்குமா குஜராத்..? கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்


பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைக்குமா குஜராத்..? கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்
x

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் குஜராத் - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

அகமதாபாத்,

ரசிகர்களை மகிழ்வித்து வரும் 17-வது ஐ.பி.எல். தொடரில் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் 63-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

குஜராத் அணி இதுவரை 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி தனது எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வெற்றி கண்டு நல்ல ரன்-ரேட்டுடன் இருந்து, மற்ற அணிகளின் முடிவு சாதகமாக அமைந்தால் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைய முடியும்.

கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 3 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி எஞ்சிய 2 ஆட்டங்களிலும் வெற்றி புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களுக்குள் இருக்க தீவிர முனைப்புடன் உள்ளது.

தங்களது வெற்றி உத்வேகத்தை தொடர கொல்கத்தா அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைக்க முழு பலத்தையும் குஜராத் அணி வெளிப்படுத்தும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ளது.


Next Story