உம்ரான் மாலிக் எங்கே? தினேஷ் கார்த்திக்கிற்கு ஏன் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவில்லை? - ஹர்பஜன் சிங்
தீபக் சாஹர் அணியில் ஏன் இடம்பெறவில்லை? என ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,
ஆசிய கோப்பை டி20 தொடரில் சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றிபெற்றது
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து, ஆசியகோப்பை டி20 தொடரில் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு இந்திய அணி கிட்டத்தட்ட இழந்துவிட்டது.
இந்திய அணியின் தோல்வி குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததும், அணியின் தேர்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உம்ரான் மாலிக் எங்கே (150 கி.மீ. வேகம்)? . தீபக் சாஹர் அணியில் ஏன் இடம்பெறவில்லை (மிகச்சிறந்த ஸ்விங் பந்துவீச்சாளர்)?. வாய்ப்புகள் கிடைக்க இவர்கள் தகுதியற்றவர்களா என்று நீங்கள் கூறுங்கள்? தினேஷ் கார்த்திக்கிற்கு ஏன் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவில்லை? ஏமாற்றம்' என தெரிவித்துள்ளார்.