தொடரை வெல்லப்போவது யார்.? கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள், கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
தரோபா,
ஒரு நாள் கிரிக்கெட்
வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை 114 ரன்னில் சுருட்டி வெற்றி கண்ட இந்திய அணி 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.
இந்த நிலையில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மல்லுக்கட்டுகின்றன. டிரினிடாட்டின் தரோபாவில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.
சோதனை முயற்சி
தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை சுழற்பந்து வீச்சு ஜாலத்தால் புரட்டியெடுத்த இந்திய அணி 2-வது ஆட்டத்தில் 181 ரன்னில் அடங்கிப்போனது. இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன், சுப்மன் கில் முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் திரட்டிய போதிலும் மிடில் வரிசை வீரர்கள் சொதப்பி விட்டனர். கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சஞ்சு சாம்சன், அக்ஷர் பட்டேலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அவர்கள் ஜொலிக்கவில்லை. ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பை போட்டி வருவதால் அதற்கு முன்பாக இளம் வீரர்களை இந்த தொடரில் பரிசோதித்து பார்ப்பதாக பயிற்சியாளர் டிராவிட் தெரிவித்தார். இதனால் இன்றைய ஆட்டத்திலும் ரோகித், விராட் கோலி இடம் பெறுவது சந்தேகம் தான். ஹர்திக் பாண்ட்யாவே அணியை வழிநடத்துவார் என்று தெரிகிறது.
50 ஓவர் போட்டியில் தொடர்ந்து தடுமாறும் சூர்யகுமார் யாதவ் இந்த ஆட்டத்திலாவது ரன்வேட்டை நடத்துவாரா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். இதே போல் முதல் இரு மோதலில் விக்கெட் எதுவும் எடுக்காத வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் திறமையை நிரூபித்து காட்ட வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறார்.
இந்திய அணி 2006-ம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இழந்ததில்லை. அந்த பெருமையை தக்க வைக்கும் தீவிரத்துடன் நமது வீரர்கள் சுழன்றடித்து மிரட்டுவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அதே சமயம் 2-வது ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கூடுதல் நம்பிக்கையும், உற்சாகமும் அடைந்துள்ளனர். அந்த ஆட்டத்தில் ஷாய் ஹோப், கேசி கர்டியின் பேட்டிங்கும், குடகேஷ் மோட்டி, ஷெப்பர்டு ஆகியோரது அபாரமான பந்து வீச்சும் வெற்றியை தேடித்தந்தன. ஒரு நாள் கிரிக்கெட்டில் 3½ ஆண்டுக்கு பிறகு இந்தியாவை சாய்த்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தொடரையும் வென்று பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களம் காணுகிறார்கள்.
மழை வாய்ப்பு
பிரையன் லாரா ஸ்டேடியத்தில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே ஒரே ஒரு 20 ஓவர் போட்டி நடந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த அந்த ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இருந்தது. இந்த ஆடுகளத்திலும் சுழற்பந்து வீச்சின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலையை பொறுத்தவரை மேகமூட்டம் காணப்படும். ஓரிரு முறை லேசான மழை குறுக்கிடலாம். அங்கு இன்று மழை பெய்வதற்கு 41 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரவு 7 மணிக்கு...
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: இஷான் கிஷன், சுப்மன் கில், சஞ்சு சாம்சன், அக்ஷர் பட்டேல், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகேஷ்குமார்.
வெஸ்ட் இண்டீஸ்: பிரன்டன் கிங், கைல் மேயர்ஸ், ஆலிக் அதானேஸ், ஷாய் ஹோப் (கேப்டன்), ஹெட்மயர், கேசி கர்டி, ரொமாரியோ ஷெப்பர்டு, யானிக் கரியா, அல்ஜாரி ஜோசப், குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீலஸ்.
இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இன்றைய ஆட்டத்தை டி.டி. ஸ்போர்ட்ஸ், டி.டி. பொதிகை சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.