தொடரை வெல்வது யார்? - இந்தியா- தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்


தொடரை வெல்வது யார்? - இந்தியா- தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
x

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது.



புதுடெல்லி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக இவ்விரு அணிகளும் விளையாடும் கடைசி சர்வதேச போட்டி இது தான்.

தொடக்க ஆட்டத்தில் 9 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்ற இந்தியா, ராஞ்சியில் நேற்று முன்தினம் நடந்த 2-வது ஆட்டத்தில் 279 ரன்கள் இலக்கை 45.5 ஓவர்களில் விரட்டிப்பிடித்து பிரமாதப்படுத்தியது. ஸ்ரேயாஸ் அய்யரும் (113 ரன்), இஷான் கிஷனும் (7 சிக்சருடன் 93 ரன்) ரன்மழை பொழிந்தனர். அதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் அசத்தும் வேட்கையில் காத்திருக்கிறார்கள். முதல் இரு ஆட்டத்தில் சரியாக ஆடாத கேப்டன் ஷிகர் தவான் சொந்த ஊரில் ஜொலிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்ததால் அதற்கு பதிலடியாக ஒரு நாள் போட்டி கோப்பையை வென்று தாயகம் திரும்பும் முனைப்புடன் உள்ளனர். உடல்நலக்குறைவால் முந்தைய ஆட்டத்தில் ஓய்வு எடுத்த கேப்டன் பவுமா, இன்றைய ஆட்டத்தில் ஆடுவார் என்று தெரிகிறது. முழங்கை காயத்தில் இருந்து மீண்ட பிறகு 4 இன்னிங்சில் 11 ரன் மட்டுமே எடுத்துள்ள அவர் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக பார்முக்கு திரும்புவதற்கு இதுவே கடைசி வாய்ப்பாகும்.

அத்துடன் இது 2023-ம் ஆண்டு 50 ஓவர் உலக போட்டிக்கான தகுதி சுற்றாக அமைந்திருப்பதால் இந்த வெற்றி தென்ஆப்பிரிக்காவுக்கு மிகவும் அவசியமாகும், அதனால் களத்தில் எல்லா வகையிலும் அவர்கள் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இந்த மைதானத்தில் இந்தியா இதுவரை 20 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளது. அதில் 12-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும் கண்டுள்ளது. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை. தென்ஆப்பிரிக்கா இங்கு ஆடியுள்ள ஒரே ஒரு ஆட்டத்திலும் (வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) வெற்றி பெற்றிருக்கிறது.

இங்குள்ள ஆடுகளம் பேட்டிங்குக்கு ஓரளவு நன்றாக இருக்கும். சுழற்பந்து வீச்சு எடுபடவும் வாய்ப்புண்டு. இரவில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் 'டாஸ்' ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங்குக்கே முன்னுரிமை அளிக்கும்.

டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால் இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மழை பெய்வதற்கு 40 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான் (கேப்டன்), சுப்மான் கில், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்குர், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது அல்லது முகேஷ்குமார், முகமது சிராஜ், அவேஷ்கான், குல்தீப் யாதவ்.

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், ரீஜா ஹென்ரிக்ஸ் அல்லது ஜேன்மன் மலான், பவுமா (கேப்டன்), மார்க்ராம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், கேஷவ் மகராஜ், அன்ரிச் நோர்டியா, இங்கிடி, ககிசோ ரபடா.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story