பெங்களூரு - சி.எஸ்.கே போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது..? - பிரையன் லாரா கணிப்பு
ஐ.பி.எல் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
மும்பை,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
மீதமுள்ள ஒரு இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறின.
இந்நிலையில் இந்த தொடரில் நாளை நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பெங்களூருவில் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி ( 18 ரன் வித்தியாசம் அல்லது இலக்கை 18.1 ஓவர்களில் எட்டிப்பிடிக்க வேண்டும்) கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் பெங்களூரு அணி தொடரில் இருந்து வெளியேறும்.இந்த நிலையில் இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்..? என்பது குறித்து பிரையன் லாரா காரணங்களை அடுக்கி பேசியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ஆர்.சி.பி அணி வெற்றி பெறுவது வெறும் பார்ம் சார்ந்த விஷயம் கிடையாது. அவர்கள் 5 போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் வேறு எந்த அணிகளும் இதை செய்யவில்லை. அந்த அணியில் விராட் கோலி இருக்கிறார். அவர் பயங்கரமான பார்மில் இருக்கிறார்.
அதேவேளையில் மற்ற வீரர்களும் தங்கள் ரோல்களை புரிந்து கொண்டு மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள். இதுதான் அவர்களது வெற்றிக்கு காரணம். அவர்கள் இதுவரை ஐ.பி.எல் தொடரை கைப்பற்றியது கிடையாது. எனவே அவர்களிடம் வெல்ல வேண்டும் என்கின்ற பசி இருக்கிறது.
சி.எஸ்.கே அணிக்கு எதிரான போட்டி அவர்கள் பிளே ஆப் செல்ல உதவும். இது அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. அந்த அணியின் பார்ம் சிறப்பாக இருக்கிறது. அந்த அணிக்கு வெல்ல வேண்டும் என்கின்ற பசி இருக்கிறது. கேப்டன் உட்பட மூத்த வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
மேலும் இளம் வீரர்களும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். நான் ஆர்.சி.பி அணியின் மொமண்டத்தை நம்புகிறேன். அவர்கள் அதைத் தொடர்ந்து எடுத்துச் செல்வார்கள். சி.எஸ்.கே அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.