மும்பை - சென்னை இடையேயான போட்டியில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்..? உத்தப்பா கணிப்பு
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற உள்ள 2-வது ஆட்டத்தில் மும்பை - சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
மும்பை,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் மாலை 3.30 மணிக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ள ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் தலா 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டன்களாக சாதனை படைத்த எம்.எஸ். தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சாதாரண வீரர்களாக விளையாட உள்ளனர்.
உத்தப்பா கணிப்பு:
இந்நிலையில் இந்த வருடம் மும்பை மற்றும் சென்னை அணிகள் ஒரு முறை மட்டுமே மோதுவதால் இப்போட்டியை எந்த ரசிகரும் தவற விட மாட்டார் என்று இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். மேலும் இப்போட்டியில் டாஸ் வென்று சேசிங் செய்பவருக்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
"அவர்கள் இம்முறை லீக் சுற்றில் ஒரு முறை மட்டுமே மோதுவதால் எந்த ரசிகரும் இப்போட்டியை தவற விட விரும்ப மாட்டார்கள். தற்சமயத்தில் மும்பை அணி மிகவும் அச்சுறுத்தலை கொடுக்கக் கூடியதாக இருப்பதை காண்பித்து வருகிறது. சி.எஸ்.கே. எப்போதும் சவாலை எதிர்கொள்ளக்கூடிய அணியாகும். எனவே இப்போட்டியில் இரு அணியிலும் பதற்றம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆனால் வான்கடே மைதானத்தில் இரு அணிகளும் ஏற்கனவே விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளனர். இம்முறை டாஸ் வெல்லும் அணி அதிகப்படியான சாதகத்தை பெறுவார்கள். இப்போட்டியில் யார் சேசிங் செய்தாலும் அவர்களின் கை ஓங்கி இருக்கும்" என்று கூறினார்.
அவர் கூறுவதுபோல மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதிய கடைசி 7 போட்டிகளில் டாஸ் வென்ற அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.