பணம் இல்லாதபோதுதான் அதன் மதிப்பு தெரிகிறது - ரிங்கு சிங்


பணம் இல்லாதபோதுதான் அதன் மதிப்பு தெரிகிறது - ரிங்கு சிங்
x

பணம் இல்லாதபோதுதான் அதன் மதிப்பு தெரிகிறது என்று ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. ஐ.பி.எல். கோப்பை வென்றுள்ள கொல்கத்தா அணியின் முக்கிய வீரராக ரிங்கு சிங் உள்ளார். 55 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிங்கு சிங் கடந்த 7 ஆண்டுகளாக கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ளார். ரிங்கு நடப்பு சீசனிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில், ஐ.பி.எல். கோப்பையை வென்றபின் ரிங்கு சிங் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. குறிப்பாக, கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள மிட்சேல் ஸ்டார்க் 24.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள நிலையில் 55 லட்ச ரூபாய் சம்பளத்தில் இருப்பது குறித்து நெறியாளர் கேள்வி எழுப்பினார். அப்போது அதற்கு பதில் அளித்த ரிங்கு சிங் கூறியதாவது,

50 முதல் 55 லட்ச ரூபாய் என்பதே எனக்கு மிகப்பெரிய பணம்தான். கிரிக்கெட் வாழ்க்கையை நான் தொடங்கும்போது இவ்வளவு பணம் சம்மாதிப்பேன் என்று நினைக்கவில்லை. நான் சிறுவனாக இருக்கும்போது 10-15 ரூபாய் கிடைத்தால் பெரிய விஷயம் என நினைத்தேன். ஆனால், தற்போது எனக்கு 55 லட்ச ரூபாய் கிடைக்கிறது. இது எனக்கு மிகப்பெரிய பணம். கடவுள் எனக்கு கொடுப்பதை நினைத்து நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இதுதான் எனது எண்ணம். எனக்கு இவ்வளவு பணம் வேண்டும் அவ்வளவு பணம் வேண்டும் என நினைக்கக்கூடாது. 55 லட்ச ரூபாய் பணத்தை வைத்தே நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இந்த பணமும் இல்லாதபோதுதான் நான் பணத்தின் மதிப்பை தெரிந்துகொண்டேன்.

நான் இன்று உங்களிடம் உண்மையை கூறவேண்டுமானால் இவை அனைத்துமே மாயைதான். உலகிற்கு நீங்கள் வரும்போது எதையும் கொண்டுவரவில்லை செல்லும்போது எதையும் எடுத்துச்செல்லப்போவதில்லை. காலம் எப்போது மாறும் என்று உங்களுக்கு தெரியாது. நீங்கள் எவ்வாறு வந்தீர்களோ அவ்வாறே செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story