3-வது டெஸ்ட் நடக்கும் ராஜ்கோட் ஆடுகளம் எப்படி இருக்கும்? குல்தீப் யாதவ் பேட்டி
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
ராஜ்கோட்,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். காயத்தில் இருந்து மீளாததால் இந்திய முன்னணி பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் விலகி விட்டார். பார்ம் இன்றி தவிக்கும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு இடமில்லை. இதனால் 3-வது டெஸ்டில் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் மற்றும் சர்ப்ராஸ் கான் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய தினம் பயிற்சிக்கு பிறகு இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ராஜ்கோட் ஆடுகளம் முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சுக்கு உகந்த வகையில் இருக்கப்போவதில்லை. ஆனால் சிறந்த ஆடுகளமாக இருக்கும். பேட்டிங்குக்கு நன்றாக இருக்கும். அதற்காக 700-800 ரன்கள் குவிக்கக்கூடிய ஆடுகளமாக இருக்கும் என்று அர்த்தமில்லை. மொத்தத்தில் உயிரோட்டமான ஒரு ஆடுகளமாக இருக்கும். சுழலுக்கும் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன். எத்தகைய ஆடுகளமாக இருந்தாலும் அனுபவித்து உற்சாகமாக பந்து வீசுவேன். ரசிகர்களும் சிறந்த ஆட்டத்தை பார்க்கவே விரும்புகிறார்கள். அது தான் முக்கியம்.
தசைப்பிடிப்பால் கடந்த டெஸ்டில் ஆடாத ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அதனால் 3-வது டெஸ்டில் அவர் விளையாடுவார் என்று நினைக்கிறேன். அணியில் எனக்கு உறுதியாக இடம் உண்டா? என்பது தெரியாது. ஆடும் லெவனில் இடம் கிடைத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.
பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடுவதில்லை. ஆனால் இங்கிலாந்தின் 'பாஸ்பால்' என்ற ஆக்ரோஷமான பேட்டிங் அணுகுமுறை பவுலர்களையும் அதற்கு ஏற்ப தயார்படுத்த வைக்கிறது. சில சமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடும் போது பந்து வீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களின் அதிரடி பற்றி கவலைப்படாமல் அவர்களின் விக்கெட்டுகளை எப்படி வீழ்த்துவது என்பதிலேயே கவனம் செலுத்துவார்கள். ஆனால் இங்கு இங்கிலாந்து வீரர்களின் அணுகுமுறை வேறுவிதமாக இருக்கிறது. தாக்குதல் பாணியை கடைபிடிக்கிறார்கள். இதனால் அவர்களின் ரன்வேட்டையை எப்படி கட்டுப்படுத்துவது என்றும் திட்டமிட வேண்டி உள்ளது. இதுவே போட்டியில் சுவாரஸ்யமாக இருக்கிறது.
இவ்வாறு குல்தீப் யாதவ் கூறினார்.