ராஜஸ்தானுக்கு எதிரான வெற்றிக்கு பின் சென்னை அணியின் கேப்டன் கூறியது என்ன..?


ராஜஸ்தானுக்கு எதிரான வெற்றிக்கு பின் சென்னை அணியின் கேப்டன் கூறியது என்ன..?
x

image courtesy: twitter/@IPL

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை வெற்றி பெற்றது.

சென்னை,

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 17-வது ஐ.பி.எல். தொடரின் 61-வது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை மட்டுமே அடித்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 47 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் அதிகபட்சமாக சிம்ரஜீத் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 42 ரன்கள் அடித்தார்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் : "உண்மையிலேயே இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் குறிப்பாக லீக் தொடரின் கடைசி கட்டத்தில் நாங்கள் பெற்ற இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. பவர் பிளேவின்போது நாங்கள் அடித்து விளையாடி இருந்தாலும் அதன்பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்.

இருப்பினும் எங்களது அணியில் உள்ள பேட்டிங் பலத்தை நம்பியதால் எந்த ஒரு அழுத்தவும் இன்றி விளையாடினோம். சேப்பாக்கம் மைதானத்தில் எப்பொழுதுமே பவுலர்களுக்கும் ஒரு பெரிய பங்கு உண்டு. அந்த வகையில் இந்த போட்டியிலும் எங்களது அணியின் பந்து வீச்சாளர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு தங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்தினர். அதேபோன்று இந்த வெற்றி எங்களுக்கு பிளே ஆப் வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியுள்ளது" என்று கூறினார்.


Next Story