ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சிக்சர் 'ஷாட்' குறித்து சூர்யகுமார் யாதவ் என்ன கூறினார்?


ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சிக்சர் ஷாட் குறித்து சூர்யகுமார் யாதவ் என்ன கூறினார்?
x

Image Courtesy: AFP 

ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சிக்சர் ‘ஷாட்’ குறித்து சூர்யகுமார் யாதவ் கூறிய பதில்.

மெல்போர்ன்,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஒரே நாளில் குரூப்2-ல் மூன்று முக்கியமான ஆட்டங்கள் நடந்தன. ஆஸ்திரேலிய நேரப்படி இரவில் மெல்போர்னில் அரங்கேறிய கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஜிம்பாப்வேயை சந்தித்தது.

இந்திய அணியில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். நெதர்லாந்திடம் தென்ஆப்பிரிக்கா பணிந்ததால் இந்த ஆட்டத்திற்கு முன்பாகவே இந்தியஅணியின் அரைஇறுதி வாய்ப்பு உறுதியாகி விட்டது. அதே உற்சாகத்துடன் 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதன்படி ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். ரோகித் சர்மா (15 ரன்), கோலி 26 ரன், ராகுல் தனது பங்குக்கு 51 ரன்கள் (35 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்த நிலையில் சிகந்தர் ராசாவின் சுழலில் சிக்கினார். ரிஷப் பண்ட் (3 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.

உலகின் 'நம்பர் ஒன்' பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் களம் புகுந்த பிறகு தான் ஆட்டம் உண்மையிலேயே சூடுபிடித்தது. சரவெடியான பேட்டிங்கால் குழுமியிருந்த 82 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை குஷிப்படுத்திய அவர் கராவா, சதரா ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்டு பிரமிக்க வைத்தார். அவருக்கு ஹர்திக் பாண்ட்யா (18 ரன், 18 பந்து) ஒத்துழைப்பு கொடுத்தார்.

இன்னிங்சை சிக்சருடன் அட்டகாசமாக முடித்து வைத்த சூர்யகுமாரின் வாணவேடிக்கையால் கடைசி 5 ஓவர்களில் மட்டும் இந்தியா 79 ரன்கள் திரட்டியது. 20 ஓவர் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 186 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 61 ரன்களுடன் (25 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தார். நடப்பு தொடரில் அவரது 3-வது அரைசதம் இதுவாகும்.

பின்னர் மெகா இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே 17.2 ஓவர்களில் 115 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். அரைசதம் நொறுக்கிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

அதன்பின்னர் சூர்யகுமார் யாதவிடம் அந்த கடைசி ஓவர்களில் எவ்வாறு அப்படி ஆடினிர்கள், அந்த மாதிரியான ஷாட்களை எப்படி அடித்தீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

அந்த நேரத்தில் ஒரு பந்துவீச்சாளரின் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும். அவர் எந்த மாதிரியான பந்து வீச போகிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் அது முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டது. நான் ரப்பர் பந்தில் நிறைய முறை இந்த மாதிரியான ஷாட்களை ஆட பயிற்சி மேற்கொண்டுள்ளேன். மேலு, அந்த நேரத்தில் பந்துவீச்சாளர் என்ன நினைத்து கொண்டிருக்கிறார் என நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story