அதனை பயன்படுத்தி இங்கிலாந்தை நாங்கள் வீழ்த்துவோம் - இலங்கை கேப்டன் நம்பிக்கை
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார்.
லண்டன்,
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற உள்ளது.
இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து இலங்கை வெல்வது கடினமானதாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் பென் ஸ்டோக்ஸ் - மெக்கல்லம் ஆகியோர் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே இங்கிலாந்து டி20 போல அதிரடியாக விளையாடி வெற்றி நடை போட்டு வருகிறது.
இருப்பினும் இத்தொடரில் காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார். எனவே அவருக்கு பதிலாக ஓலி போப் தற்காலிக கேப்டனாக செயல்பட உள்ளார்.
இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியின் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் இடையே சமநிலை ஏற்படுத்தக்கூடிய தூணை போன்ற வீரர் என இலங்கை கேப்டன் தனஞ்செயா டி சில்வா தெரிவித்துள்ளார். எனவே ஸ்டோக்ஸ் விலகியுள்ளதால் சமநிலையில் ஏற்பட்டுள்ள ஓட்டையைப் பயன்படுத்தி தங்களுடைய உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் இங்கிலாந்தை தோற்கடிப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் முதல் போட்டிக்கு முன் பேசியது பின்வருமாறு:- "பென் ஸ்டோக்ஸ்தான் இங்கிலாந்து அணியில் சமநிலையை ஏற்படுத்தும் வீரர். பேட்டிங், பவுலிங் போன்ற எதுவாக இருந்தாலும் அவர்தான் இங்கிலாந்தின் முக்கிய வீரர். அவருக்கு பதிலாக புதிய பையன் (டான் லாரன்ஸ்) தொடக்க வீரராக விளையாட உள்ளார். கண்டிப்பாக அவர் அழுத்தத்தின் கீழ் விளையாடுவார். மறுபுறம் எங்கள் அணியில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அதே போல எங்களிடம் உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர் பிரபத் ஜெயசூர்யா உள்ளார்.
ஒருவேளை இரண்டாவது இன்னிங்சில் அவர் நன்றாக விளையாடினால் போட்டியை நாங்கள் வெல்வதற்கான வாய்ப்புள்ளதாக கருதுகிறேன். இயன் பெல் இங்கிலாந்துக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய தரமான வீரர். இத்தொடரில் எங்களுடைய பேட்டிங் பயிற்சியாளராக செயல்படும் அவரிடம் நாங்கள் நிறைய ஆலோசனைகளை பெற்றோம்" என்று கூறினார்.