இந்த தோல்வியை மறந்து விட்டு அடுத்த போட்டிக்கு நாங்கள் சீக்கிரம் தயாராக வேண்டும் - கேன் வில்லியம்சன்


இந்த தோல்வியை மறந்து விட்டு அடுத்த போட்டிக்கு நாங்கள் சீக்கிரம் தயாராக வேண்டும் - கேன் வில்லியம்சன்
x

Image Courtesy: @ICC

நாங்கள் இந்த இலக்கைத் துரத்தும் பொழுது எங்களுக்கு நல்ல பாட்னர்ஷிப் தேவைப்பட்டது. ஆனால் எங்களுக்கு அது கிடைக்கவில்லை.

கயானா ,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் ஆடின.

இந்த ஆட்டம் வெஸ்ட் இண்டீசில் உள்ள கயானாவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது.

ஆப்கானிஸ்தான் தரப்ப்பில் அதிகபட்சமாக குர்பாஸ் 80 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, பவுல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 75 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் 84 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், பசல்ஹக் பரூக்கி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் அளித்த பேட்டியில் கூறியதாவது,

முதலில் ஆப்கானிஸ்தான் அணிக்கு என் வாழ்த்துக்கள். அவர்கள் எல்லா வகையிலும் எங்களை விட சிறப்பாக செயல்பட்டார்கள். இந்த விக்கெட்டில் நல்ல ஸ்கோரை பெறுவதற்கு விக்கெட்டை கையில் வைத்து சிறப்பாக விளையாடினார்கள். நாங்கள் இந்த தோல்வியை மறந்து விட்டு அடுத்த போட்டிக்கு சீக்கிரத்தில் தயாராக வேண்டும்.

இந்தப் போட்டிக்காக எங்கள் வீரர்கள் கடினமாக உழைத்தனர். நாங்கள் இந்த இலக்கைத் துரத்தும் பொழுது எங்களுக்கு நல்ல பாட்னர்ஷிப் தேவைப்பட்டது. ஆனால் எங்களுக்கு அது கிடைக்கவில்லை. மேலும் பந்துவீச்சில் முதல் 10 ஓவர்களில் நாங்கள் பீல்டிங்கில் கோட்டை விட்டோம்.

நாங்கள் இதைவிட சிறந்தவர்கள் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் இதை விட்டு விலகிச் சென்று அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும். அதே சமயத்தில் நல்ல ஸ்கோர் கிடைத்ததும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அதைப் பயன்படுத்தி மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story