நாங்கள் எந்த அளவில் விளையாட வேண்டும் என நினைத்தோமோ அதை செய்யவில்லை - ரோவ்மன் பவல் பேட்டி
9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
கயானா,
9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - பப்புவா நியூ கினியா அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பப்புவா நியூ கினியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. பப்புவா நியூ கினியா தரப்பில் அதிகபட்சமாக செசெ பாவ் 50 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரசல், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 137 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அதிரடி வீரர்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்த்த வேளையில் 19 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 137 ரன் எடுத்து வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் சேஸ் 42 ரன்கள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்த போது 16வது ஓவர் வரை போட்டியை அழுத்தத்துடன் எடுத்துச் சென்றது கத்துக்குட்டி அணியான பப்புவா நியூ கினியா. இந்த போட்டிக்கு பின் பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் தங்கள் அணி சரியாக விளையாடவில்லை என கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
பப்புவா நியூ கினியா அணியின் திட்டம் எளிமையானதாக இருந்தது. அவர்கள் நல்ல கிரிக்கெட்டை ஆடினார்கள். எங்களுக்கு இரண்டு புள்ளிகள் வேண்டும் என்று மட்டும் நாங்கள் நினைத்தோம். அதைத் தான் நாங்கள் செய்தோம். பப்புவா நியூ கினியா 10 முதல் 15 ரன்கள் கூடுதலாக எடுத்துவிட்டது.
ஒரு பவுலிங் குழுவாக நாங்கள் அவர்களை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். நான் கேப்டன் ஆக வந்ததிலிருந்து அணியில் இருக்கும் 70 முதல் 80 சதவீதம் வீரர்கள் ஒன்றாகவே விளையாடி வருகிறோம்.
நாங்கள் எந்த அளவில் விளையாட வேண்டும் என நினைத்தோமோ, அதை செய்யவில்லை. நாங்கள் 60 முதல் 70 சதவீதம் வரை தான் நன்றாக ஆடினோம். எங்களது இரண்டாவது போட்டியில் அதை சரி செய்து கொள்வோம் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.