நாங்கள் சரியாக பீல்டிங் செய்யவில்லை - தோல்வி குறித்து கேப்டன் ஷிகர் தவான் கருத்து


நாங்கள் சரியாக பீல்டிங் செய்யவில்லை  - தோல்வி குறித்து கேப்டன் ஷிகர் தவான் கருத்து
x

Image Courtesy: BCCI Twitter

தினத்தந்தி 7 Oct 2022 1:54 PM IST (Updated: 7 Oct 2022 1:54 PM IST)
t-max-icont-min-icon

பீல்டிங்கில் தவறு செய்ததால் சில ரன்களை விட்டு கொடுத்து விட்டோம், ஆனால் இது இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவமாகவும், கற்றலாகவும் இருக்கும் என்றார்.

லக்னோ,

இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் நடந்த டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவன் பந்துவீச்சை தேர்வுசெய்தார். மழையால் ஏற்பட்ட தாமதம் காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டு இருந்தது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்தது. இதையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

இந்திய அணி 40 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களே எடுத்து 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 86 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நிகிடி 3 விக்கெட்களையும், ரபாடா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணியின் தோல்விக்கு பின்னர் கேப்டன் ஷிகர் தவான் கூறியதாவது,

எங்கள் வீரர்கள் விளையாடிய விதத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். ஸ்ரேயாஸ், சாம்சன், ஷர்துல் தாகூர் அபாரமாக விளையாடினர். ஆடுகளத்தில் பந்து நன்றாக திரும்பியது. வேகமும் இருந்தது.

இதனால் 250 ரன் இலக்கு என்பது அதிகமானது என்று நினைத்தேன். பீல்டிங்கில் தவறு செய்ததால் சில ரன்களை விட்டு கொடுத்து விட்டோம். ஆனால் இது இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவமாகவும், கற்றலாகவும் இருக்கும் என்றார்.

சஞ்சு சாம்சன் கூறும் போது,

நடு ஓவர்களில் விளையாடுவது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி அதிக ரன் விட்டு கொடுத்தார். எனவே அவரை இலக்கு வைத்து விளையாடினேன். கடைசி ஓவரை ஷம்சி வீசுவார் என்று எங்களுக்கு தெரியும்.

கடைசி ஓவரில் 24 ரன் எடுக்க வேண்டி இருந்திருந்தால் அதில் நான்கு சிக்சர் அடிக்க முடியும் என்று எனக்கு தெரியும். இரண்டு ஷாட்களை அடிக்க தவறிவிட்டேன். அடுத்த முறை இன்னும் கடினமாக முயற்சி செய்வேன். ஆனால் எனது பங்களிப்பில் நான் திருப்தியடைந்தேன் என்றார்.

3 ஆட்டம் கொண்ட தொடரில் 2-வது ஆட்டம் வருகிற 9-ந்தேதி ராஞ்சியில் நடக்கிறது.


Next Story