யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற்று அசத்திய விராட் கோலி..!!
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி, பெங்களூருவில் இன்று நடைபெற்ற யோ-யோ டெஸ்டில் 17.2 மதிப்பெண்களை பெற்றார்.
பெங்களூரு,
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது . கடந்த 10 வருடங்களாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.
உலகக்கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் தயாராகும் வகையில் வரும் 30ம் தேதி ஆசிய கோப்பை தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து விரைவில் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன.
உலகக்கோப்பையில் களமிறங்கும் தங்களுடைய இறுதிக்கட்ட வீரர்களை தேர்வு செய்ய உதவும் இந்த தொடரில் விளையாடுவதற்கு ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் காயத்தில் இருந்து மீண்ட கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இன்னும் முழுமையாக பிட்டாகாமல் கடந்த 3 மாதங்களுக்கு மேல் எவ்விதமான முதன்மையான போட்டிகளிலும் விளையாடாமல் இருக்கும் வீரர்களை ஆசிய கோப்பையில் தேர்வு செய்தது நிறைய விமர்சனங்களையும் எழுப்பி இருந்தது.
இந்நிலைமையில் இலங்கையில் நடைபெறும் தங்களுடைய ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் விரைவில் அங்கு செல்ல உள்ளனர். அதற்கு முன்பாக பெங்களூருவில் இருக்கும் என்சிஏவில் இந்திய வீரர்களின் பிட்னெஸ் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் யோயோ சோதனை நடைபெற்று வருகிறது.
இதன்படி யோ யோ டெஸ்டில் நட்சத்திர இந்திய வீரர் விராட் கோலி இன்று கலந்து கொண்டு தன்னுடைய உடல் தகுதியை நிரூபித்துள்ளார். அந்த தேர்வில் அனைத்து விதமான சோதனைகளையும் கடந்த விராட் கோலி 17.2 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பான அவரின் பதிவில், "பயமுறுத்தும் சங்குகளுக்கு இடையே யோ யோ சோதனையை முடித்த மகிழ்ச்சி. 17.2 ஆக முடிந்தது" என்று கூறியுள்ளார். குறிப்பாக பிசிசிஐ விதிமுறைகளின் படி 16.5 என்பது யோ யோ தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்ணாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.