'சிக்சர் அடிக்காமலே சதமடிக்கும் திறமை கொண்ட வீரர் விராட் கோலி' - சஞ்சய் பங்கார்


சிக்சர் அடிக்காமலே சதமடிக்கும் திறமை கொண்ட வீரர் விராட் கோலி - சஞ்சய் பங்கார்
x

இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணியில் விராட் கோலி இடம் பெறத் தகுதியானவர் என்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து வருகிறார். இருப்பினும் கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பின் இந்திய அணி விளையாடிய டி20 போட்டிகளில் அவர் இடம் பெறவில்லை. இது குறித்து விராட் கோலி மற்றும் பிசிசிஐ இதுவரை எதுவும் கூறவில்லை என்றாலும் அவர் இனிவரும் டி20 போட்டிகளுக்கான அணியில் இடம் பெறமாட்டார் என்ற கருத்துகள் நிலவுகின்றன.

இந்நிலையில் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறத் தகுதியானவர் என்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

கோலி குறித்து இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், 'உலகக் கோப்பை போன்று பெரிய போட்டிகளில் கடினமான சூழ்நிலைகளில் ஒரு சிறிய தவறு கூட பெரிய தோல்வியை கொடுக்கும். அது போன்ற சூழ்நிலைகளை சமாளிக்க உங்களுக்கு திறமையான வீரர்கள் தேவை. அது போன்ற சமயங்களில் உங்களுடைய ஸ்டிரைக் ரேட் மற்றும் ஐபிஎல் தொடரில் என்ன செய்தீர்கள்? என்பது முக்கியமல்ல. எனவே பெரிய போட்டிகளில் அசத்துவதற்கு பெரிய வீரர்கள் தேவை. அதனை கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் விராட் கோலி காண்பித்தார்' என்று கூறினார்.

மேலும் அவர், 'ஒவ்வொருவருக்கும் இங்கே தனித்தனியான பேட்டிங் ஸ்டைல் இருக்கிறது. நீங்கள் அதிரடியாக விளையாடினால்தான் ரன்கள் அடிக்க முடியும் என்று கிடையாது. ஒருவேளை அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் அனைத்து டி20 உலகக் கோப்பைகளையும் வென்றிருக்க வேண்டும். ஆனால் விராட் கோலி சிக்சர் அடிக்காமலேயே சதமடிக்கும் திறமை கொண்ட பேட்ஸ்மேன். கடந்த ஐபிஎல்-ல் குஜராத்துக்கு எதிரான போட்டியில் அவர் ஒரு சிக்சர் கூட அடிக்காமலேயே சதமடித்தார். குறிப்பாக பந்தை தரையோடு தரையாக அடிக்கும் அவரது பேட்டிங் திறமை விராட் கோலியின் மதிப்பை காட்டுகிறது" என்று கூறினார்.

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் 4008 ரன்களுடன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story