விராட் கோலி என் மகனைப் போன்றவர்...அவரை பற்றி நான் ஏன் அப்படி சொல்லபோகிறேன்? - சேத்தன் சர்மா பல்டி
கடந்த ஆண்டு ஒரு தனியார் டி.வி.சேனல் நடத்திய ரகசிய ஆபரேஷனில் இந்திய அணியின் உள்விவகாரங்கள் குறித்து சேத்தன் சர்மா உளறினார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவரான சேத்தன் ஷர்மா, கடந்த ஆண்டு தனியார் டி.வி.சேனல் நடத்திய ரகசிய ஆபரேஷனில் இந்திய அணியின் உள்விவகாரங்கள் குறித்து அவர் உளறிக்கொட்டினார். அதன் பின் அது டெலிவிஷனில் செய்தியாக வெளியாகி பெருத்த சலசலப்பை ஏற்படுத்தியது.
அதாவது காயத்தில் சிக்கும் நிறைய இந்திய கிரிக்கெட் வீரர்கள் முழு உடல் தகுதியை எட்டாவிட்டாலும் கூட சீக்கிரம் களம் திரும்புவதற்காக ஊசிகளை போட்டுக் கொள்வதாக கூறிய அவர் விராட்கோலிக்கும், கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலிக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியதாகவும் கூறினார்.
கிரிக்கெட் வாரியத்தை விட தன்னை பெரிய ஆளாக நினைத்து விராட்கோலி செயல்பட்டதால்தான் கேப்டன் பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் அவர் தனது பதவி பறிபோனதற்கு கங்குலி தான் காரணம் என்று தவறாக கருதினார். ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட சில இந்திய வீரர்கள் தனது வீட்டுக்கு அடிக்கடி வருவது உண்டு என்பது உள்பட பல்வேறு ரகசியங்களை சேத்தன் ஷர்மா அம்பலப்படுத்தினார்.
அத்துடன் தனது பொறுப்பை உணராமல் விதிமுறைக்கு புறம்பாக எல்லை மீறி பேசிய சேத்தன் ஷர்மா மீது இந்திய கிரிக்கெட் வாரியம் மட்டுமின்றி வீரர்களும் கடும் அதிருப்திக்குள்ளானார்கள். இது நடந்து சில நாட்கள் கழித்து தேர்வு குழு தலைவர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தம்முடைய மகனைப்போன்ற விராட் கோலியை பற்றி நான் ஏன் அப்படி சொல்லியிருப்பேன்? என்று சேத்தன் சர்மா புதிய பல்டி கருத்தை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு;-
"விராட் கோலி என்னுடைய மகனைப் போன்றவர். அவர் மிகவும் திறமையானவர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் எப்படி அவரைப் பற்றி மோசமான கருத்துகளை சொல்ல முடியும்? அவர் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன். அவர் தற்போது ஜாம்பவானாக உருவெடுத்துள்ளது எனக்கு பெரிய கவுரவத்தை கொடுக்கிறது. அவர் மீண்டும் இந்திய அணியில் விளையாடி 100 சதங்கள் அடிப்பார் என்று நான் நம்புகிறேன். விராட் கோலி இந்திய கிரிக்கெட்டின் முகம். அவர் மீண்டும் விளையாடுவதற்காக நான் காத்திருக்கிறேன்" என்று கூறினார்.