விராட் கோலி எந்த அணிக்கு எதிராகவும் அசத்தக்கூடியவர் - புகழாரம் சூட்டிய பாக். முன்னாள் கேப்டன்


விராட் கோலி எந்த அணிக்கு எதிராகவும் அசத்தக்கூடியவர் -  புகழாரம் சூட்டிய பாக். முன்னாள் கேப்டன்
x

image courtesy: PTI

உடல் வலிமையை விட மன வலிமையை அதிகமாக கொண்டுள்ள விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு சேதத்தை ஏற்படுத்துவதுபோல் செயல்படுவதாக மிஸ்பா உல் ஹக் பாராட்டியுள்ளார்.

கராச்சி,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 1ம் தேதி (இந்திய நேரப்படி 2ம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.

அதில் இந்திய அணி தனது பரம எதிரியான பாகிஸ்தானுடன் ஜூன் 9-ம் தேதி மோத உள்ளது. அந்த போட்டிக்கு வழக்கம்போல இரு நாடுகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆரம்பத்திலேயே இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கியது. ஆனால் அப்போது நங்கூரமாக விளையாடிய விராட் கோலி 82* (53) ரன்கள் அடித்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்தார்.

இந்நிலையில் உடல் வலிமையை விட மன வலிமையை அதிகமாக கொண்டுள்ள விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு சேதத்தை ஏற்படுத்துவதுபோல் செயல்படுவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டனான மிஸ்பா உல் ஹக் பாராட்டியுள்ளார். எனவே 2017-ல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபிபோல 2025 சாம்பியன்ஸ் டிராபியிலும் விராட் கோலியை முன்கூட்டியே அவுட்டாக்கத் தவறினால் இந்தியாவை தோற்கடிப்பது கடினம் என்று எச்சரிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"குறிப்பிட்ட எதிரணிக்கு எதிராக சில வீரர்கள் நன்றாக செயல்படும்போது அது அவர்கள் மனதில் இருக்கும். அந்தப் போட்டிகளில் உங்கள் தாக்கம் எப்போதும் வலுவாக இருக்கும் என்பதால் அது எதிரணியை பாதிக்கிறது. விராட் கோலிக்கு அந்த சாதகம் இருக்கிறது. பாகிஸ்தான் மீது விராட் கோலி மனதளவில் மேலாதிக்கத்தை வைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும்போது கடினமான சூழ்நிலையில் கூட அவர் அதிக நம்பிக்கையுடன் இருப்பார்.

விராட் கோலி பெரிய போட்டிகளில் அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் அதை உத்வேகமாக எடுத்துக் கொள்ளக்கூடிய வீரர். டாப் கிளாஸ் வீரரான அவர் எந்த அணிக்கு எதிராகவும் அசத்தக்கூடியவர். பாகிஸ்தான் உட்பட அனைத்து அணிகளும் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் அவரை ஆரம்பத்திலேயே அவுட்டாக்குவதே வெற்றிக்கான ஒரே வழியாகும். ஸ்ட்ரைக் ரேட் பற்றி நீங்கள் எவ்வளவு பேசினாலும் விராட் கோலிக்கு தனது அணியை எப்படி வெற்றி பெற வைக்க முடியும் என்பது தெரியும். சூழ்நிலையும் எதிரணியும் எதுவாக இருந்தாலும் அது விராட் கோலிக்கு எதிராக பாதுகாப்பானதல்ல" என்று கூறினார்.


Next Story