சூர்யகுமாரின் பேட்டிங்கை பார்த்து திகைத்து போனேன் - விராட் கோலி புகழாரம்
ஆசிய கிரிக்கெட்டில் ஹாங்காங்குக்கு எதிரான ஆட்டத்தில் சூர்யகுமாரின் அதிரடியான பேட்டிங்கை பார்த்து திகைத்து போனதாக இந்திய வீரர் விராட் கோலி கூறியுள்ளார்.
துபாய்,
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் இந்தியா 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தியது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் (68 ரன், 26 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்), விராட் கோலி (59 ரன், 44 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) ஆகியோர் அரைசதம் விளாசினர். இதில் சூர்யகுமார் கடைசி ஓவரில் 4 பிரமாதமான சிக்சர்களை அடித்து சிலிர்க்க வைத்தார்.
இன்னிங்ஸ் முடிந்ததும் பெவிலியன் நோக்கி திரும்பும் போது விராட் கோலி நெஞ்சில் கைவைத்து சிரம் தாழ்த்தி சூர்யகுமாருக்கு மரியாதை செய்தார். பின்னர் அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான கோலி, தனது ஜூனியர் வீரரை பார்த்து தலைவணங்கிய வீடியோ தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வைரலாகி வருகிறது.
இது குறித்து சூர்யகுமார் யாதவ் கூறுகையில், 'கோலியின் செயல் என்னை நெகிழ வைத்து விட்டது. இதற்கு முன்பு இது போன்ற அனுபவத்தை நான் ஒரு போதும் கண்டதில்லை. இன்னிங்ஸ் முடிந்ததும் அவர் ஏன் எனக்கு முன்னால் நடந்து செல்லாமல் நின்று கொண்டிருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டேன். அதன் பிறகு அவர் சேர்ந்து செல்வோம் என்று கூறிய பிறகே எல்லாம் புரிந்தது. அவருடன் இணைந்து பேட்டிங் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். உற்சாகமாக ஆடினேன். அடுத்த சில பந்துகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து நிறைய பேசினோம். கோலியுடன் நான் அதிகமான 20 ஓவர் போட்டிகளில் விளையாடியதில்லை. எனவே தற்போது கிடைத்த இந்த அனுபவம் முக்கியமானது' என்றார்.
வெற்றிக்கு பிறகு கோலியும், சூர்யகுமார் யாதவும் மைதானத்தில் அமர்ந்து சிறிது நேரம் ஜாலியாக கலந்துரையாடினர். அப்போது கோலி கூறுகையில், 'சூர்யகுமார் யாதவின் பேட்டிங் அற்புதம். இன்னொரு முனையில் நின்று கொண்டு அவரது பேட்டிங்கை பார்த்து ரசித்தேன். ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது எங்கள் அணிக்கு எதிராகவோ அல்லது மற்ற அணிகளுக்கு எதிராகவோ அவர் இது போன்று ஆடுவதை பார்த்து இருக்கிறேன். ஆனால் அவரது இன்னிங்சை மிக அருகாமையில் நின்று ரசித்தது இதுவே முதல் அனுபவமாகும். அவரது பேட்டிங்கை பார்த்து நான் முற்றிலும் திகைத்து போய் விட்டேன். இது போன்று தொடர்ந்து விளையாடும் பட்சத்தில் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் ஆட்டத்தின் போக்கை அவரால் மாற்ற முடியும் என்று நம்புகிறேன்' என்றார்.
31 வயதான சூர்யகுமார் யாதவ் பேசும் போது, 'களம் இறங்குவதற்கு முன்பாக, ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருக்கிறது. எனவே ஆட்டத்தை எப்படி முன்னெடுத்து செல்வது என்பது குறித்து ரிஷப் பண்டிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதன் பிறகு பேட்டிங் செய்ய நுழைந்ததும் என்னால் எது முடியுமோ அதை செய்வதில் கவனம் செலுத்தினேன். எனது திட்டமிடல் மிக எளிது. முதல் 10 பந்துகளில் 3-4 பவுண்டரி அடிக்க வேண்டும். அது சரியாக அமையும் போது, தொடர்ந்து அதே போன்று பேட்டிங் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டேன்' என்றார்.
'கடைசி ஓவரில் 6 பந்துகளையும் சிக்சருக்கு விரட்ட முயற்சித்தேன். ஆனால் என்னால் யுவராஜ்சிங்கின் சாதனையை (ஒரே ஓவரில் 6 சிக்சர்) கடக்க முடியவில்லை' என்று கூறி சிரித்தார்.'என்னை பொறுத்தவரை பேட்டிங்கில் எந்த வரிசையிலும் விளையாட முடியும். அணி நிர்வாகம் எந்த வரிசையில் ஆடச் சொல்கிறதோ அதை செய்ய தயாராக இருக்கிறேன்' என்றும் சூர்யகுமார் குறிப்பிட்டார்.